உள்ளூர் செய்திகள்
கல்லிடைக்குறிச்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி நிற்கும் பூவலிங்கத்தின் மகன்கள்.

குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த 2 மாணவர்கள்

Published On 2022-02-15 10:20 IST   |   Update On 2022-02-15 10:20:00 IST
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கக்கோரி 2 மாணவர்கள் குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் கல்லிடைக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை:

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் பூவலிங்கம். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு படித்தனர்.

கொரோனா காரணமாக அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி என அறிவிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் பூவலிங்கத்தின் மகன்கள் 2 பேரையும் பள்ளி நிர்வாகம் தேர்ச்சி என அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பூவலிங்கம் பள்ளியில் சென்று கேட்டும் எவ்வித பதிலும் முறையாக தெரிவிக்கப்படவில்லை என்று கூறி அவர் தனது குடும்பத்தினருடன் வீட்டுக்குள்ளேயே உள்ளிருப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் இன்று காலை கல்லிடைக்குறிச்சி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காய்கறி சந்தைக்கு பூவலிங்கம் தனது மகன்களுடன் சென்றார். அங்கிருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பூவலிங்கத்தின் 2 மகன்களும் ஏறினர். அங்கு நின்று கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்ய போவதாக அவர்கள் மிரட்டல் விடுத்தனர்.

உடனே சந்தைபகுதியில் இருந்தவர்கள் கல்லிடைக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு அம்பை தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். தீயணைப்பு துறையினர் 2 மாணவர்களையும் கீழே இறக்கி கொண்டு வர முயன்றனர்.

ஆனால் தண்ணீர் தொட்டியில் ஏறினால் கீழே குதித்து விடுவோம் என்றும், உடனடியாக எங்கள் 2 பேரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்து விட்டனர்.

இன்று கல்லிடைக் றிச்சியில் வாரச்சந்தை என்பதால் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதுதொடர்பாக அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் மற்றும் அதிகாரிகள் பூவலிங்கம் மற்றும் அவரது மகன்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Similar News