உள்ளூர் செய்திகள்
கொள்ளை நடந்த வீடு.

டாக்டர் குடும்பத்தினரை கட்டிப்போட்டு 280 பவுன் நகை கொள்ளை

Published On 2022-02-15 09:13 IST   |   Update On 2022-02-15 09:13:00 IST
ஒட்டன்சத்திரத்தில் டாக்டர் குடும்பத்தினர் 4 பேரை கட்டிப்போட்டு 280 பவுன் நகை, ரூ.25 லட்சம் ரொக்கம் மற்றும் காரை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் - தாராபுரம் சாலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மகப்பேறு மருத்துவமனை வைத்து நடத்தி வருபவர் சக்திவேல் (வயது 52). இவரது மனைவி ராணி (45). இருவரும் டாக்டர். இவர்கள் நாகனம்பட்டி புறவழிச்சாலையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். சக்திவேலுடன் அவரது தந்தை வெண்ணியப்பன், தாய் தேவநாயகம் ஆகியோரும் வசித்து வருகின்றனர். நேற்று இரவு கிளீனிக்கில் பணியை முடித்துவிட்டு இருவரும் வீட்டிற்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் தங்கள் அறையில் தூங்கச் சென்றுவிட்டனர். சக்திவேலின் பெற்றோர் வழக்கம் போல் வீட்டு முன்புறம் உள்ள செட்டில் தூங்கச் சென்றுவிட்டனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென இவர்களது வீட்டு காம்பவுண்டு சுவரை தாண்டிக் குதித்து 4 பேர் உள்ளே புகுந்தனர். அவர்கள் வீட்டு முன்புறம் தூங்கிக் கொண்டிருந்த வெண்ணியப்பன் மற்றும் அவரது மனைவியை கட்டிப்போட்டனர். அதன் பிறகு கதவை உடைத்து உள்ளே சென்றனர். அறையில் தூங்கிக் கொண்டிருந்த சக்திவேல் மற்றும் அவரது மனைவியையும் கட்டிப் போட்டனர்.

அதன் பின் ஒவ்வொரு அறையாக சென்று பீரோவை திறந்தனர். அதிலிருந்த 280 பவுன் நகை, ரூ.25 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை ஒரு பேக்கில் வைத்தனர். பின்னர் மற்ற அறைகளையும் சோதனை செய்துவிட்டு வேறு எதுவும் இல்லாததால் வீட்டை விட்டு வெளியே வந்தனர். வாசலில் நின்று கொண்டிருந்த காரில் கொள்ளையடித்த நகை, பணத்துடன் அந்த கும்பல் தப்பிச் சென்றனர்.

அதன் பின்பு காலை 4 மணிவரை டாக்டர் சக்திவேல் அறைக்குள்ளேயே போராடி தனது கட்டுகளை விடுவித்தார். அதன் பிறகு ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், ஏ.டி.எஸ்.பி.க்கள் லாவண்யா, சந்திரன், டி.எஸ்.பி. சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

அவர்கள் டாக்டர் குடும்பத்தினரிடம் கொள்ளை நடந்த விதம் குறித்து கேட்டறிந்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. கைரேகை தடயவியல் நிபுணர்கள் வந்து கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்தனர்.

கொள்ளை நடந்த பங்களா தனியாக அக்கம் பக்கத்தில் யாரும் வசிக்காத பகுதியாக உள்ளது. அருகில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மனைகளாக பிரித்துப் போட்டு உள்ளதால் மக்கள் எளிதில் வர இயலாது. இதனை நன்கு நோட்டமிட்டு கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். மேலும் டாக்டர் சக்திவேல் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் உடைந்து பழுதாகிவிட்டது. அதனை மாற்றவும் இல்லை. இதனையும் கொள்ளையர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். எனவே இவருக்கு நெருக்கமானவர்கள் அல்லது அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்பவர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

கொள்ளையர்கள் 4 பேர் கையுறை மற்றும் மாஸ்க் அணிந்து முகத்தை தெரியாதபடி மறைத்து வைத்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 25 முதல் 30 வயது இருக்கும் என்று டாக்டர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஒட்டன்சத்திரம் அருகே நாகனம்பட்டியில் கடந்த வருடமும் இதேபோல தனியாக இருந்த ஒரு விவசாயி வீட்டிற்குள் புகுந்து அவர்களை கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். தற்போது அதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. இது ஒட்டன்சத்திரம் மட்டுமின்றி அதன் சுற்று வட்டாரப் பகுதியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News