உள்ளூர் செய்திகள்
திருச்சி அருகே சோகம் - பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் வேன் புகுந்து 3 பேர் பலி
பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்திற்குள் வேன் புகுந்ததில் 3 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
மணப்பாறை:
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாலையிட்டு விரதமிருந்து பாத யாத்திரையாக வருடந்தோறும் செல்வது வழக்கம்.
இந்த ஆண்டும் விரதமிருந்த பக்தர்கள் நேற்று மாலை அய்யலூரில் இருந்து கலர்பட்டியைச் சேர்ந்த பிச்சை என்பவர் தலைமையில் புறப்பட்டனர். ஒவ்வொரு குழுக்களாகப் பிரிந்து பாதயாத்திரை சென்று கொண்டிருந்தனர். வழியில் பக்தர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்டவைகளை வழங்குவதற்காக வாகனம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது ஒரு குழுவை சேர்ந்தவர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலையில் திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை அடுத்த இடையபட்டியான்பட்டி என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து மணப்பாறை நோக்கி தக்காளி ஏற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து திடீரென்று பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் 7 பக்தர்கள் படுகாயமடைந்து சாலையில் ஆளுக்கொரு திசையில் தூக்கி வீசப்பட்டு உடல் நசுங்கினர். மேலும் விபத்தை ஏற்படுத்திய வேனை டிரைவர் மணப்பாறை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று நிறுத்தினார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சீகம்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (24), எரியோடு எம்.ஜி.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்த சேகர் (40), ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த ரம்யா (34), முத்துப்பாண்டி (34), மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் மணப்பாறை மற்றும் திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் படுகாயமடைந்த 4 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேன் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிகாலையில் நடந்த கோர விபத்தில் 3 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்...பராமரிப்பு பணியால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு