உள்ளூர் செய்திகள்
சூளைமேட்டை எழில்மிகு பகுதியாக மாற்ற எனக்கு வாய்ப்பு அளியுங்கள் - அ.தி.மு.க வேட்பாளர் வேண்டுகோள்
அ.தி.மு.க வேட்பாளர் வார்டிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கோவில்கள், மசூதி, தேவாலயங்களுக்கு சென்று வணங்கி கோவில் நிர்வாகிகளையும், பக்தர்களையும் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
சென்னை:
சென்னை மாநகராட்சி தேர்தலில் சூளைமேடு 109-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிடும் தகவல் தொழில்நுட்ப பிரிவு பட்டதாரி பெண் டி.சங்கீதா சூளைமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்களில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் செல்லும் இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் அவருக்கு மலர் மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும், பூக்கள் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். வார்டிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கோவில்கள், மசூதி, தேவாலயங்களுக்கு சென்று வணங்கி கோவில் நிர்வாகிகளையும், பக்தர்களையும் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் வாக்காளர்கள் இடையே பேசுகையில், முன்னாள் முதல்-அமைச்சர் அம்மா ஜெயலலிதாவால் நிறைவேற்றப்பட்ட அனைவருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம்,அம்மா உணவகம், அம்மா குடிநீர்,அம்மா மினி கிளினிக்,வீராணம் குடிநீர் திட்டம், அரசு இ சேவை மையம், அம்மா சமூக நலக் கூடம், மாணவமாணவிகளுக்கு இலவச மடிக்கணினி, உட்பட பல்வேறு திட்டங்களை வழங்கி தமிழக மக்களின் வாழ்வாதாரம் உயர அயராது பாடுபட்ட அம்மாவின் சின்னமான இரட்டை இலைக்கு வாக்களித்து நமது இந்த வார்டை எழில்மிகு பகுதியாக மாற்ற எனக்கு வாய்ப்பளியுங்கள் என்று இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி வாக்கு சேகரித்தார். அவருடன் ஏராளமான அ.தி. மு.க. .நிர்வாகிகளும், தொண்டர்களும் சென்று வாக்கு சேகரித்தனர்.