உள்ளூர் செய்திகள்
பண்ருட்டியில் காணாமல் போன சிறுமி மீட்பு
சிறுமி காணாமல் போன சில மணி நேரங்களில் பண்ருட்டி போலீசாரின் துரித நடவடிக்கையால் சிறுமி மீட்கப்பட்டார்.
பண்ருட்டி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 7).
இவர், திருவதிகை எம்.ஜி.ஆர். நகரிலுள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ளநகராட்சி பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று காலை சுமார் 7 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே செல்வதாக கூறி விட்டு சென்ற சிறுமியை காணவில்லை.
பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால் சிறுமி காணாமல் போன செய்தி நகரில் காட்டு தீ போல பரவியது. சிறுமி கடத்தப்பட்டாரா? இல்லை அவருக்கு ஏதாவது கொடுமைகள் நேர்ந்ததா? என்று அனைவரும் பதை பதைப்பில் இருந்தனர்.
இது பற்றி பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் உடனடி நடவடிக்கையில் இறங்கினார். சிறுமி வீட்டிலிருந்து புறப்பட்ட வழிகளில் இருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தனர். இதுபற்றி நடவடிக்கை எடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா முடுக்கி விட்டார்.
போலீசார் ஆனந்த், விமல், ராஜலட்சுமி ஆகியோர் பண்ருட்டி-மடப்பட்டு சாலையில் உள்ள அனைத்து கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தனர். ஒவ்வொரு கேமராவிலும் கிடைத்த பதிவின் அடிப்படையில் மடப்பட்டு செல்லும் சாலையில் சிறுமி நடந்து செல்வது தெரிய வந்தது. இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் சிறுமியை தேடி மடப்பட்டு சாலைக்கு விரைந்தனர்.
பிற்பகல் 3 மணி அளவில் மணப்பாக்கம் கிராமம் அருகே அந்த சிறுமி நடந்து சென்றது தெரிய வந்தது. சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்றதால் மிகவும் களைப்படைந்து, மயங்கி விழும் நிலையில் சென்று கொண்டிருந்த சிறுமியை பத்திரமாக மீட்டு தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்கி சிறுமியை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
சிறுமி காணாமல் போன சில மணி நேரங்களில் பண்ருட்டி போலீசாரின் துரித நடவடிக்கையால் சிறுமி மீட்கப்பட்டார். பண்ருட்டி போலீசாரின் அதிரடி நடவடிக்கைக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்தது.