தண்டையார்பேட்டை பகுதியில் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம்
ராயபுரம்:
சென்னை மாநகராட்சி 38-வது வார்டுக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை பரமேஸ்வரன் நகர் பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அவர்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததை கண்டித்து வருகிற 19-ந் தேதி நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
பொதுமக்கள் இன்று காலை தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும், அப்பகுதி முழுவதும் தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்கள் ஒட்டியும் இருக்கிறார்கள்.
மேலும் அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தேர்தலை புறக்கணிப்பதாக கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.
நாங்கள் இந்த பகுதியில் 3 தலைமுறைகளாக வசித்து வருகிறோம். இதுவரை நாங்கள் வசித்து வரும் வீடுகளுக்கு மாநகராட்சி வரி விதிப்பதில்லை. மேலும் எங்களுக்கு என்று மயான பூமி இல்லை.
கழிவுநீர் வடிகால் வசதி, பொது கழிப்பிட வசதி கிடையாது . மின்மாற்றி பழுதடைந்து பல வருடங்கள் ஆகிறது. இது குறித்து அதிகாரியிடம் முறையிட்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்தப் பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இதுவரை எந்த அரசியல் கட்சியிலும் செய்து தரவில்லை.
தேர்தல் நேரத்தின்போது மட்டும் எங்களின் வாக்குகளை பெற வரும் அரசியல் கட்சியினர் அதன்பின்னர் கண்டுகொள்வதில்லை.
எனவே நாங்கள் வருகிற உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கிறோம். யாருக்கும் ஓட்டுப்போட போவது இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.