கடலூரில் வாக்கு எண்ணும் மையத்தில் டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு
கடலூர்:
தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
அதன்படி கடலூர் மாநகராட்சி, நகராட்சிகள், மற்றும் 14 பேரூராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி, வாக்குச்சாவடி பெட்டிகள் பாதுகாப்பாக வைப்பதற்கு அறைகள் தயார் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான பாலசுப்பிரமணியம் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்று வருகின்றது.
கடலூர் மாநகராட்சியில் 152 வாக்குச்சாவடி மையங்களில் சுமார் 700-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இதனைத் தொடர்ந்து கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் பள்ளியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது தடுப்பு கட்டைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவற்றில் அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் போலீஸ் சரக டி.ஐ.ஜி. பாண்டியன் வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறும் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக ஆய்வு செய்தார்.
பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசிடம் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து கடலூர் முதுநகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.