உள்ளூர் செய்திகள்
வடமாநில தொழிலாளர்களை கடத்திய 13 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கோவை சிறையில் உள்ள 13 பேரிடம் குண்டர் சட்ட கைதுக்கான உத்தரவை பல்லடம் போலீசார் வழங்கினர்.
பல்லடம்:
ஒடிசாவை சேர்ந்த பிரதீஷ்குமார் மல்லி, ( வயது 23,) கன்ஜன் முன்னா, (27) புதேஷ்பணிகிராய் (26). இவர்கள் 3 பேரும் பல்லடம் அருகே உள்ள அபிராமி நகரில் வாடகை வீட்டில் தங்கிக்கொண்டு சின்னக்கரை தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர் .
கடந்த டிசம்பர் 15ந்தேதி இரவு வேலை முடிந்து திரும்பி வரும் போது காரில் வந்த கும்பலால் கடத்தப்பட்டனர். இதுகுறித்த விசாரணையில் வட மாநிலத் தொழிலாளர்களை கடத்தி அவர்களிடம் பணம் பறிக்கும் கும்பல் சிக்கியது .
இதில் சிவகங்கையை சேர்ந்த அழகு சுப்பி ரமணி (37), அமர்நாத்(21), பீகாரை சேர்ந்த ராஜ் குமார்(27), கரைப்புதூரை சேர்ந்த அஜீத்குமார் (26), பல்லடத்தை சேர்ந்த விக்னேஷ், பாலகிருஷ்ணன், தர்மேந்திரா, கவிபாரதி, உகேஷ், முத்து பாண்டி, சுந்தர், நசீர் அன்சாரி மற்றும் பாப்பாமியா உள்ளிட்ட 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து மாவட்ட கலெக்டர் வினீத் 13 பேரையும், குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கோவை சிறையில் உள்ள அவர்களிடம் அதற்கான உத்தரவை பல்லடம் போலீசார் வழங்கினர்.