உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

புதிய மேயர், உறுப்பினர்களை வரவேற்க தயாராகும் திருச்சி மாநகராட்சி

Published On 2022-02-14 15:47 IST   |   Update On 2022-02-14 15:47:00 IST
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறும் புதிய மேயர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் விதமாக திருச்சி மாநகராட்சி வேகமாக தயாராகி வருகிறது.
திருச்சி:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை 22-ந்தேதி நடைபெற உள்ளது. 

இதையொட்டி தேர்தலை எந்தவிதமான பிரச்சினையும் இன்றி அமைதியான முறையில் நடத்தி முடிக்கும் வகையில் தேர்தல் அதிகாரிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் மார்ச் 2-ந்தேதி வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து, மார்ச் 4-ந்தேதி மேயர், துணை மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர், துணை தலைவர்களுக்கான மறைமுக தேர்தலும் நடைபெற உள்ளது.

இதன்படி, 5 ஆண்டுகளுக்குப்பிறகு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பதவியேற்க உள்ளனர். இதற்காக, திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கை சுத்தம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, உறுப்பினர்கள் அமரும் இருக்கைகள் சேதமாகிவிட்டன. இதையடுத்து, மேயர், துணை மேயர், உறுப்பினர்களின் இருக்கைகளை சீரமைத்தல், அரங்குக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் மிகவும் துரிதமாக நடைபெற்று வருகிறது என்றனர்.

Similar News