உள்ளூர் செய்திகள்
பெண் இன்ஸ்பெக்டரின் வங்கி லாக்கர்களில் இன்று சோதனை - 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை
பெண் இன்ஸ்பெக்டரின் வங்கி லாக்கர்களிலும் பல ஆவணங்கள் இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் இன்று வங்கி லாக்கர்களை சோதனை நடத்த உள்ளனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சேவியர் பாண்டியன். இவர் நாகர்கோவில் கோர்ட்டில் குற்றவியல் இயக்குனராக உள்ளார்.
இவரது மனைவி கண்மணி. இவர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
கணவன் -மனைவி இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. பீட்டர் பால் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் கண்மணி வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் வீட்டில் இருந்த ரொக்க பணம் ரூ.7 லட்சத்து 35 ஆயிரம் மற்றும் ரூ.91 லட்சத்துக்கான ஆவணங்கள், 91 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டன.
இதுபோல இன்ஸ்பெக்டர் கண்மணியின் தோழி அமுதா என்வரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அங்கும் பல ஆவணங்கள் கைப்பற்றப்படட்டன. இதன்மூலம் கணவன்- மனைவி இருவரும் வருமானத்துக்கு அதிகமாக 171 சதவீதம் சொத்துக்கள் சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே இன்ஸ்பெக்டரின் வங்கி லாக்கர்களிலும் பல ஆவணங்கள் இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே அவர்கள் இன்று வங்கி லாக்கர்களை சோதனை நடத்த உள்ளனர்.
இது தொடர்பான தகவல்கள் அனைத்தும் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.