உள்ளூர் செய்திகள்
சமூக வலைதளங்களில் முட்டி மோதும் தி.மு.க., பா.ம.க.
தி.மு.க., அ.தி.மு.க. மாவட்ட செயலாளரை சந்தித்த பா.ம.க. வேட்பாளரால் சமூக வலைதளங்களில் தி.மு.க., பா.ம.க.வினர் கருத்துகளை பரப்பி வருகின்றனர்.
வேலூர்:
வேலூரில் தி.மு.க.பா.ம.க. இடையே சமூக வலைத்தளத்தில் பனிப்போர் ஏற்பட்டுள்ளது. வார்த்தைகளால் இரண்டு கட்சி நிர்வாகிகளும் மோதலைத் தொடர்ந்து வருகின்றனர்.
வேலூர் மாநகராட்சி 24 வது வார்டு பா.ம.க. வேட்பாளர் பரசுராமன். கடந்த வாரம் தி.மு.க. மாவட்ட செயலாளர் நந்தகுமார், மாநகர செயலாளர் கார்த்திகேயனை பார்த்து சால்வை அணிவித்து விட்டு வந்தார்.
அது நடந்த மறுநாளே ‘பா.ம.க வேட்பாளரை தி.முக.வினர் கடத்தி, மிரட்டிவிட்டனர் ‘ என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட் போட்டார். உடனடியாக நந்த குமாரும் ஒரு வீடியோவை வெளியிட்டு ‘ தி.மு.க சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வந்தார் ‘என்று பதிவிட, அதே நேரத்தில் பா.ம.க. மாவட்ட தலைவர் இளவழகன் ‘வேட்பாளர்களை மிரட்டுறாங்க ‘ என்று எஸ்.பி.யிடம் தி.மு.க மீது புகார் அளித்தார்.
அப்படியே பிரச்னை அமுங்கியது. இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் பரசுராமன் பரபரப்புக்கு உள்ளானார். இந்தமுறை அ.தி.மு.க மாநகர மாவட்ட செயலாளர் அப்புவுக்கு சால்வை அணிவித்து விட்டு வாழ்த்து தெரிவித்து, பாமகவுக்கு ஆதரவு தாருங்கள்,
நாங்கள் போட்டியிடாத இடங்களில் உங்களது வெற்றிக்கு பாடுபடுவோம் ‘என்று உறுதியளித்தாக அவர் இருந்த படத்தை அப்பு சமூக வலைதளத்தில் பதிவிட்டதால் மீண்டும் பரபரப்பு பற்றியது.
அ.தி.மு.க, பா.ம.க கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டி என்றாகி விட்ட நிலையில் எப்படி அ.தி.மு.க, பா.ம.க. ஆதரவு நிலைப்பாடு சரியாகும் என்று பட்டிமன்றமே நடந்த நேரத்தில், பரசுராமனுடன் அப்புவை பார்க்கச் சென்ற பாமக மாவட்ட துணைத்தலைவர் சரவணனை கட்சியை விட்டு தூக்கியது பாமக தலைமை.
அத்துடன் பிரச்சினை முடிந்தது என்று நினைத்தால் மீண்டும் நேற்று சர்ச்சை கிளம்பியது. ‘ எங்களை வந்து பரசுராமன் பார்த்தபோது கடத்தி விட்டதாக பேசி னீர்களே, இப்ப அ.தி.மு.க மாவட்ட செயலாளர் அப்புவும், பா.ம.க வேட்பாளர் பரசு ராமனை கடத்திவிட்டதாக சொல்வீர்களா?.
அப்புவை பார்த்ததற்காக மாவட்ட துணைத்தலைவர் சரவணனை கட்சியி லிருந்து நீக்கினீர்கள், பரசுராமனை விட்டு விட்டீர்களே, மண்டையை விட்டு கொண்டையை மறந்து விட்டீர்களே ‘ என்று தி.மு.க மாவட்ட செயலாளர் நந்தகுமார் சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்.
இதுநடந்த கொஞ்ச நேரத்தில், ‘ பா.ம.க தலைமை முடிவு செய்தால் செய்ததுதான், நிறுவனர் ராமதாஸ் எடுப்பதுதான் இறுதி முடிவு, அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம், தலை இருக்கும்போது வால் ஆடக்கூடாது. அதனால் சரவணனை நீக்கிவிட்டோம். தி.மு.க.வில் தவறு செய்பவர்களை ஏற்றுக்கொள்வார்கள்.
பா.ம.க.வில் தவறு செய்தவர்களை தலைமை கிள்ளி போட்டுள்ளது.
காலையும், வாலையும் மட்டுமே பார்க்கக் கூடாது ‘என்று இளவழகன் பதிலுக்கு பதிவு செய்ய பரசுராமனால் தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க.வில் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.
அப்புவை பார்த்ததால் பா.ம.க. மாவட்ட துணைத்தலைவர் சரவணன் கட்சி உறுப்பினர் பதவி பறிப்பு நடந்தது, ஆனால் பரசுராமன் மீது இல்லையே. பரசுராமன் வேட்பாளர், தேர்தல் முடிந்ததும் பரசுராமனுக்கும் கல்தா கொடுக்கப்படும் என்கின்றனர்.
அதே நேரத்தில் இந்த விஷயத்தை பெரியதாக ஆக்கியது அப்புதான். போட்டோவை போடாமல் இருந்திருந்தால் பிரச்னையே வந்திரு க்காது என்று வருத்தப்படுகின்றனர் பா.ம.க.வினர். சமூக வலைதளங்களில் தி.மு.க, பா.ம.க. மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.