உள்ளூர் செய்திகள்
பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்ற காட்சி.

உடுமலை குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பு

Published On 2022-02-14 15:25 IST   |   Update On 2022-02-14 15:50:00 IST
பல அரிய வகை பறவைகளையும் கணக்கெடுப்பின் போது பார்த்ததால், இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
உடுமலை:

தமிழகத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பு 12, 13ந்தேதிகளில் நடைபெற்றது. ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக் கோட்டம், ஏழு குள பாசன திட்டத்துக்குட்பட்ட, பெரியகுளம், செட்டிகுளம், கரிசல்குளம், ஒட்டுக்குளம், தினைகுளம் மற்றும் கிராமங்களில் அமைந்துள்ள, மருள்பட்டி குளம், பாப்பான்குளம், சின்ன வீரம்பட்டி குளம் ஆகிய குளங்களிலும், உப்பாறு அணைப்பகுதியிலும் இந்த பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது.

இதில் வனத்துறை பணியாளர்கள், ‘நேச்சர் சொசைட்டி ஆப் திருப்பூர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ரவீந்திரன் தலைமையிலான குழுவினரும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர். 

நீர்நிலைகளில் உள்ள பறவைகள், நீர்நிலைகளின் அருகிலுள்ள புதர்களில் உள்ள பறவைகள் கணக்கு எடுக்கப்பட்டது .இதில், அரிய வகையை சேர்ந்த உள்நாட்டில் இடம் பெயரும் தன்மையுள்ள மற்றும் வெளிநாட்டு பறவைகள் என சுமார் 70 வகையான பறவைகள் கணக்கிடப்பட்டது

அதில் நத்தை குத்தி நாரை, புள்ளி மூக்கு வாத்து, சிகப்பு மூக்கு ஆள்காட்டி, தாரா, நீர் கக்கா, சாம்பல் நாரை, செந்நீல நாரை, ஆற்று ஆலா, நீல தாலை கோழி, நாம கோழி, தாமரை கோழி, மண் கொத்தி, சிறிய நீல மீன்கொத்தி, முக்குளிப்பான் உள்ளிட்ட பறவைகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும், ஏழு குள பாசன திட்ட குளங்களில், வெள்ளை அரிவாள் மூக்கன், கொண்டலாத்தி, நீல வால் கீச்சன், தவிட்டு குருவி, செம்பருந்து, தேன் பருந்து, செண்பகம், மஞ்சள் வாலாட்டி, மைனா, பச்சை கிளி, கரிச்சான், நீலவால் பஞ்சுருட்டன், தையல் சிட்டு, ஊதா தேன்சிட்டு, கதிர் குருவி, சிட்டுக்குருவி, குயில், கவுதாரி, பனை உழவாரன், வால் காக்கை, புள்ளி ஆந்தை உள்ளிட்ட பறவைகளையும், கணக்கிட்டு, பதிவு செய்தனர். பல அரிய வகை பறவைகளையும் கணக்கெடுப்பின்போது பார்த்ததால், இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்தனர்

Similar News