உள்ளூர் செய்திகள்
சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

பாளை அருகே தொடர்விபத்தை தடுக்க 4 வழிச்சாலையில் மேம்பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்

Published On 2022-02-14 09:29 GMT   |   Update On 2022-02-14 09:29 GMT
நெல்லை-மதுரை நான்கு வழி சாலையில் கீழநத்தம் பகுதியில் இன்று காலை மீண்டும் பொதுமக்கள் திரண்டனர். மேம்பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கும் வரை நகர மாட்டோம் என்று கூறி சுமார் 250 பேர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

நெல்லை:

நெல்லை கே.டி.சி. நகர் அருகே கீழநத்தம் பஞ்சாயத்து உள்ளது. இந்த பகுதியில் உள்ள நான்குவழி சாலையை பொதுமக்கள் கடக்கும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

கடந்த 2 மாதங்களாக ஏற்பட்டு வரும் விபத்துக்களால் உயிரிழப்புகளும் நிகழ்ந்துவிட்டது. இதனால் அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தினால் உயிரிழந்த ஒருவரின் உடலை வாங்க மறுத்து அப்பகுதியினர் போராட்டம் நடத்தினர். அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர்.

இந்நிலையில் இன்றும் அதே இடத்தில் விபத்து ஒன்று ஏற்பட்டு அந்த நபர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அந்த பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர்.

நெல்லை-மதுரை நான்கு வழி சாலையில் கீழநத்தம் பகுதியில் இன்று காலை மீண்டும் பொதுமக்கள் திரண்டனர். மேம்பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கும் வரை நகர மாட்டோம் என்று கூறி சுமார் 250 பேர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த பாளை போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனாலும் பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் 2 மணி நேரமாக நீடித்து வரும் போராட்டத்தால் அந்த வழியாக வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

Tags:    

Similar News