உள்ளூர் செய்திகள்
அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் மற்றும் பூலாம்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணிகளை மாவட்ட கலெக்டரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ஸ்ரீ வெங்கட பிரியா ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது அலுவலர்களிடம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை தமிழ்நாடு தேர்தல் ஆணைய விதி முறைகள் அனைத்தும் முழுமையாக பின்பற்றி மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பணியின் போதும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இதுகுறித்து அவர் கூறியததாவது, பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி மற்றும் நான்கு பேரூராட்சி ஆகியவைகளுக்கு வரும் 19 ந்தேதி அன்று தேர்தல் நடை பெறுகிறது. தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன் படுத்தப்பட உள்ளது.
வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு எந்திரங்கள் பெல் பொறியாளர்கள் கண்காணிப்பில் வாக்குச்சீட்டுகள் பொருத்தப்பட்டு காப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்படும்.
எந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணிகள் மற்றும் காப்பு அறையில் பாது காப்புடன் வைக்கும் பணிகள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்பு நடை பெறுகிறது. இத்தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வருகை தந்து அவசியம் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.