உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

சித்தியின் வீட்டை இடித்த மகன் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு

Published On 2022-02-14 13:29 IST   |   Update On 2022-02-14 13:29:00 IST
வேதாரண்யம் அருகே சித்தியின் வீட்டை இடித்த மகன் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா தென்னடார் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். ஓய்வுபெற்ற ஆசிரியர். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி 
பஞ்சகல்யாணி. 2வது மனைவி பவானி. வடிவேலும், பஞ்ச கல்யாணியும் இறந்து விட்டார்கள். 

தற்போது தென்னடாரில் உள்ள வீட்டில் 2வது மனைவி பவானி தனியாக வசித்து வருகிறார். முதல் மனைவியின் மகன் எழிலழரசன் சென்னையில் வசித்து வருகிறார்.

இவர் தென்னடாரில் உள்ள தனது பூர்வீக இடத்தில் வீடு கட்டுவதற்காக வீட்டை இடிக்க வேண்டும் என்று தனது சித்தி பாவனியிடம் கூறியுள்ளார்.
 
இதற்கு பவானி எனது கணவர் வீட்டில் நான் இறக்கும் வரை வாழ்வேன் எனக் கூறி காலி செய்ய மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த எழிலரசன் பலமுறை பவானிக்கு தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால் பவானி பூச்சி மருந்தை குடித்ததால் திருவாரூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் மருத்துவ மனையில் பவானி இருக்கும் பொழுது எழிலரசன் எந்திரம் வைத்து பாவனியின் ஓட்டுவீட்டை இடித்து விட்டார். தகவலறிந்து தென்னடார் ஊராட்சி மன்ற தலைவர் தேவிசெந்தில் அங்கு வந்து அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

தகவலறிந்த வாய்மேடு இன்ஸ்பெக்டர் பொறுப்பு நாகலெட்சுமி விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தை விலக்கி கொண்டார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எழிலரசன், அவரது மனைவி கவிதா மற்றும் தென்னடாரை சேர்ந்த கருணாநிதி, நடராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Similar News