உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரியில் இதுவரை பறக்கும் படை சோதனையில் ரூ.41.03 லட்சம் பறிமுதல்
கன்னியாகுமரியில் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.41.03 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் 75 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறைக்கு தேர்தல் தொடர்பான புகார்களை செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். பறக்கும் படை அதிகாரிகள் நேற்று முன்தினம் குழித்துறை நகராட்சி பகுதியில் ரூ.86 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
51 பேரூராட்சி பகுதிகளி லும் அதிரடி சோதனை நடந்து வருகிறது. திற்பரப்பு பேரூராட்சியில் ரூ.62 ஆயிரத்து 950, அஞ்சுகிராமம் பேரூராட்சியில் ரூ.1 லட்சத்து 38 ஆயிரம், கருங்கல் பேரூராட்சியில் ரூ.93 ஆயிரத்து 500 பறிமுதல் செய் யப்பட்டது.
திற்பரப்பு பேரூராட்சி பகுதியில் நேற்றும் ரூ.63 ஆயிரத்து 800 சிக்கி உள்ளது. மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் இதுவரை ரூ.41 லட்சத்து 3 ஆயிரத்து 600 பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
நாகர்கோவில் பகுதியில் இன்று காலையிலும் சோதனை நடந்தது. 52 வார்டுகளுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனை முழுவதும் வீடியோவிலும் பதிவு செய்யபட்டது. இதேபோல் நகராட்சிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.