உள்ளூர் செய்திகள்
அண்ணாமலை

பா.ஜ.க.வால் மட்டுமே ஊழல் இல்லாத ஆட்சி தர முடியும்- அண்ணாமலை பேச்சு

Published On 2022-02-12 15:13 IST   |   Update On 2022-02-12 15:13:00 IST
பா.ஜ.க.வால் மட்டுமே ஊழல் இல்லாத ஆட்சி தர முடியும் என வேலூரில் அண்ணாமலை பேச்சு
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் வேலூர் மண்டி தெருவில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:-

தமிழகத்தில் ஊழல் இல்லாத நிர்வாகம் அமைய நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும். இவர்கள் அனைவரும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் 517 வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் 7 வாக்குறுதிகளை கூட அவரால் முழுமையாக நிறைவேற்றமுடியவில்லை.

அண்மையில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பு பொருட்களில் ஒன்று கூட தரமான பொருட்கள் வழங்கப்படவில்லை. இதனால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

மஞ்சள் தூளுக்கு பதிலாக மரத்தூளையும், மிளகுக்கு பதிலாக பருத்தி கொட்டையையும் கொடுத்தனர். வெல்லத்தை பக்கெட்டில் கொண்டு சென்றனர். சில இடங்களில் பொங்கல் தொகுப்பில் பல்லி போன்றவை இருந்தது.

தமிழகத்தின் 8 மாத கால ஆட்சியில் மக்களுக்கான எந்தவித திட்டமும் கொண்டு வரப்படவில்லை.

நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதன் மூலம் தற்போது அரசு பள்ளியில் பயின்ற 541 மாணவர்கள் மருத்துவக் கல்வியைப் பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். 

அரசு நிர்ணயித்த கட்டணங்களை கூட கட்டமுடியாத நிலையில் பல மாணவர்கள் உள்ளனர். இவர்கள் எல்லாம் தற்போது மருத்துவ கல்வி பயில காரணமாக இருப்பது நீட்தேர்வு தான். நீட் தேர்வு இல்லாத காலத்தில் மருத்துவக் கல்வி பயில பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று உள்ளது. 

அவை எல்லாம் தற்போது களையப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக நீட் தேர்வை எதிர்க்கிறார்கள். தனியார் கல்லூரியின் கல்விக்கொள்கையை நீட் உடைத்துள்ளது.

கொரோனா தொற்று காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படக் கூடாது என்பதற்காக, பிரதமர் மோடி மக்களின் உயிர்களை காப்பாற்ற நாடு முழுவதும் 450 ரெயில்கள் மூலம் ஆக்சிஜனை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்தார்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்திருந்த நிலையில் கொரோனா தடுப்பூசி கொண்டுவரப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதன் மூலம் 172 கோடி தடுப்பூசி டோஸ் செலுத்தப் பட்டுள்ளது.

கிருஷ்ணா, கோதாவரி, தென்பெண்ணை ஆறுகளை இணைக்க ரூ.85 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது.

2024-ல் எம்.பி. தேர்தலும், எம்.எல்.ஏ. தேர்தலும் ஒன்றாக வரும் என்று கூறுகிறார்கள். இது தமிழகத்தில் ஆட்சி எப்படி நடக்கிறது என்பதைப் பொருத்துத்தான் அமையும்.

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நிறைவேற்ற பல ஆண்டுகள் ஆகி உள்ளது. ஊழலின் காரணமாக இந்த திட்டம் நிறைவேற்ற பல ஆண்டுகள் ஆகியுள்ளது. இன்னும் கூட அந்த திட்டம் முடியவில்லை.

எனவே இது போன்ற ஊழல் இல்லாத ஆட்சி தர பா.ஜ.க.வில் மட்டுமே தான் முடியும். இதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மக்களின் வாழ்க்கையும் மேம்படும். தமிழகத்தில் பா.ஜ.க மட்டுமே மாற்றுக்கட்சியாகும். மக்களுக்கு மாற்றத்தை தரும் கட்சியாகும்.

தி.மு.க. மீது மக்களுடைய கோபம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்து கொண்டதால் நேரிடையாக பிரசாரம் செய்யாமல் காணொலி காட்சி வாயிலாக பிரசாரம் செய்கிறார். வேலூரிலும் வாரிசு அரசியல் உள்ளது.

ஹெலிகாப்டரில் இருந்து வெடிகுண்டு போட்டாலும் கொள்கை நிலைப்பாட்டில் இருந்து மாறமாட்டோம்.  இவ்வாறு அவர் பேசினார். 

கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News