உள்ளூர் செய்திகள்
சாலை மறியல்

சாலை விபத்தில் தனியார் கம்பெனி ஊழியர் பலி - நஷ்ட ஈடு வழங்க கோரி உறவினர்கள் சாலை மறியல்

Published On 2022-02-11 13:49 GMT   |   Update On 2022-02-11 13:49 GMT
ஊத்துக்கோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் தனியார் கம்பெனி ஊழியர் பலியானார். இதற்கு நஷ்ட ஈடு வழங்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊத்துக்கோட்டை:

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கட்சூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாதிரி. இவரது மகன் உதயகுமார்( வயது 22 ). அனந்தேரி கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகன் உதயா (வயது 21). உதயகுமார் மற்றும் உதயா ஆகிய இருவரும் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். 

இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு ஆந்திரமாநிலம் அழகிரி பேட்டையில் நடந்த தெருக்கூத்து நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குப் புறப்பட்டனர். பென்னாலூர் பேட்டை அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலை ஓரத்தில் கவிந்தது. இதில் உதயகுமார், உதயா ஆகியோர் இருவரும் படுகாயம் அடைந்தனர். 

இவர்களை கட்சூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உதயகுமார் இறந்தார். உதயா சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் உதயகுமாரின் உறவிர்கள் நஷ்ட ஈடு வழங்க கோரி கட்சூரில் ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்தவுடன் பென்னலூர் பேட்டை இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். 

பொது போக்குவரத்துக்கு இடையூறு செய்வது குற்றம் என்று அறிவுறைத்தால் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் சுமார் அரை மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பென்னலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News