உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

காட்பாடியில் கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவியை மீட்க வாலிபரின் குடும்பத்தினரை கடத்த முயற்சி

Published On 2022-02-11 15:20 IST   |   Update On 2022-02-11 15:20:00 IST
காட்பாடி அருகே கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவியை மீட்க வாலிபரின் குடும்பத்தினரை கடத்த முயற்சி செய்த சென்னையை சேர்ந்த 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடி&குடியாத்தம் சாலையில் கிளித்தான்பட்டரை அருகேயுள்ள கடை ஒன்றில் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய ஒரு கும்பல் ரகசிய திட்டம் தீட்டி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்பேரில், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான குழுவினர் அங்கு விரைந்து சென்று 4 பேர் கும்பலை சுற்றிவளைத்தனர்.

அந்த நேரத்தில் கடைக்கு வெளியே நின்றிருந்த சென்னை பதிவெண் கொண்ட கார் ஒன்று அங்கிருந்த இருசக்கர வாகனம் ஒன்றை இடித்துவிட்டு மின்னல் வேகத்தில் குடியாத்தம் நோக்கி வேகமாக சென்றது.

இதைப்பார்த்த போலீசார் அந்த காரை விரட்டிச் சென்றனர். அந்த கார் எல்.ஜி புதூர் அருகே சென்றதும் சாலையோரத்தில் நின்றது. 

காரில் இருந்த 2 பேர் இறங்கி ஊருக்குள் தப்பி ஓடினர். அவர்களை விரட்டியதில் ஒருவரை மட்டும் பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

பிடிபட்ட 5 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். அவர்களில் எல்ஜி புதூர் கிராமத்தில் சிக்கியவர் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த இம்ரான் என்றும் மற்றவர்கள் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்த பாஷா (25), மணலியை சேர்ந்த அசோக் (39), ராயபுரத்தைச் சேர்ந்த மாதவன் (27), எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிபாலன் (26) என்றும் தெரியவந்தது.

இதில், இம்ரான் என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு பேரணாம்பட்டில் காரில் சென்றபோது விபத்தை ஏற்படுத்தியதும், அப்போது அந்த காரில் இருந்து பாஜக கொடி, வாள் மற்றும் கையெறி குண்டு போன்ற சிகரெட் லைட்டர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்திருந்தனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் பிரபல ரவுடி ஒருவரின் மனைவியுடன் ஓட்டம் பிடித்துள்ளார். அவர்கள் தலைமறைவாக உள்ளனர். 

அந்தப் பெண்ணை மீட்பதற்காக வாலிபரின் குடும்பத்தினரை இந்த கும்பல் கடத்தி மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது.தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News