உள்ளூர் செய்திகள்
பேரணாம்பட்டு வாக்கு எண்ணும் மையத்தை மாற்றியமைக்க வலியுறுத்தல்
பேரணாம்பட்டு வாக்கு எண்ணும் மையத்தை மாற்றியமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குடியாத்தம்:
பேர்ணாம்பட்டு நகராட்சியில் பதிவாகும் வாக்குகள் எண்ணும் மையத்தை பழைய நடைமுறைப்படி நகரின் மையப்பகுதியில் உள்ள பள்ளியிலேயே அமைக்க வேண்டும் என எதிர்க் கட்சிகள் வலியுறுத்தின.
பேரணாம்பட்டு நகராட்சியில் பதிவாகும் வாக்குகள் நீண்ட காலமாக நகரின் மையப் பகுதியில் உள்ள பள்ளியில் எண்ணப்பட்டு வந்தன.
தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணும் மையம் கொண்டம்பல்லி கிராமத்தில் உள்ள மரீத் ஹாஜி இஸ் மாயில் சாஹிப் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பேரணாம்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான சையது உசேன் வியாழக்கிழமை அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் முன்பு வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இணையதளம் வாயிலாக ஒதுக்கீடு செய்வது குறித்தும், தேர்தல் விதிமுறைகள் குறித்தும் விளக்கினார்.
அப்போது அ.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், நாம் தமிழர் கட்சி, பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க. ஆகிய கட்சி வேட்பாளர்கள் பல ஆண்டுகளாக வழக்கமாக பேர்ணாம்பட்டு நகரில் உள்ள பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது.
ஆனால் இப்போது அந்த நடைமுறையை மாற்றி, நகர எல்லையில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடத்த முடிவெடுத்தது ஏன் என கேள்வி எழுப்பினர்.
அந்த கல்லூரி ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளதாகவும், சுற்றுச் சுவர் இல்லாததால், வாக்குப் பதிவு எந்திரங்களுக்கு பாதுகாப்பு இல்லை.
எனவே, பழையபடி பள்ளியிலேயே வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் என்றனர். இது குறித்து கலெக்டரிடம் முறையிடுமாறு வேட்பா ளர்களிடம் தேர்தல் அலுவலர் கூறி விட்டு சென்றார்.