உள்ளூர் செய்திகள்
வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்ற 2 முதியவர்கள் கைது
தருமபுரி பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்ற 2 முதியவர்களை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவின்பேரில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, குட்கா விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று அதியமான்கோட்டை போலீசாருக்கு நூல அள்ளி பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார், நூலஅள்ளி அடுத்த வட்டாளிகொட்டாய் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் திடீரென சோதனை செய்தனர்.
அப்போது அந்த வீட்டில் இருந்த முதியவர் மாரி என்கிற மாரியப்பன் (வயது 75) என்பவர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் தருமபுரி அடுத்த குரும்பட்டி பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற விஜயராகவன் (63) என்பவரை தருமபுரி டவுன் இன்ஸ்பெக்டர் நவாஸ் மற்றும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சைவை போலீசார் பறிமுதல் செய்தனர்.