உள்ளூர் செய்திகள்
தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் வேலூரில் நேற்று நடந்தது.
இதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சி ஜனநாயக முறைப்படி நடந்தது ஆனால் தி.மு.க. ஆட்சி தலைகீழாக நடக்கிறது.
நீட் தேர்வு காரணமாக ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவம் பயில முடியாத சூழ்நிலை ஏற்பட்டதின் காரணமாக கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. ஆட்சியில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.
இதனால் ஆண்டுக்கு 541 மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.
கொரோனா காலத்தில் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக 10 மாத காலம் இலவச அரிசி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்பட்டது. மேலும் அம்மா உணவகங்கள் மூலம் நாளொன்றுக்கு 3 வேளையும் 7 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது.
அ.தி.மு.க. அரசு சிறுபான்மை இன மக்களுக்காக தொடர்ந்து ஆதரவு அளிக்கும். அ.தி.மு.க. கொள்கையிலிருந்து என்றும் மாறாது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளையும், வாக்கு எண்ணுவதையும், வாக்குப்பதிவையும், வாக்குப்பெட்டி வைக்கும் இடத்தையும், வாக்கு எண்ணிக்கையும் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்ய வேண்டும்.
சக்கரம் போல் ஆட்சி மாற்றம் ஏற்படும் அதனால் அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும், நடுநிலையோடும் ஜனநாயகத்தோடும் மக்களுக்காக செயல்பட வேண்டும்.
அப்பாவி மக்களை காவல்துறையினர் துன்புறுத்தக் கூடாது. அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு காப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருந்தது.
ஆனால் இன்று தி.மு.க.ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
கொலைகள், கொலை, திருடு போன்ற சம்பவங்கள் அனுதினமும் நடந்து வருகிறது.
வேலூரில் தி.மு.க.வினரால் அ.தி.மு.க. வினர் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
வேலூரில் தோல்வி பயம் காரணமாக தி.மு.க.வினரால் அ.தி.மு.க.வினர் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.