உள்ளூர் செய்திகள்
அரக்கோணத்தில் குடிநீர் விநியோகம் செய்யாததால் பொது மக்கள் சாலை மறியல்
அரக்கோணத்தில் குடிநீர் விநியோகம் செய்யாததால் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடி தண்ணீர் வினியோகம் செய்யப்படாததால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதனை கண்டித்தும் சீரான குடிநீர் வழங்ககோரியும் பழனிப்பேட்டை பகுதியில் உள்ள பொது மக்கள் திடிரென பழனி பேட்டை காந்தி ரோட்டில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சினிவாசன் மற்றும் நகராட்சி பொறியாளர் ஆசீர்வாதம் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது மறியலில் ஈடுபட்டவர்களுடன் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட பைப் லைன்கள் பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் சீரான குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டதாகவும்.
மேலும், தக்கோலம் நீரேற்று நிலையம் மட்டுமே செயல்படுவதால் போதிய குடிநீர் வழங்க முடியவில்லை என்றும் தொடர்ந்து பொய்கைப்பாக்கம் அருகே பைப் லைன் உடைப்பு ஏற்பட்டுள்ளதை சரி செய்யும் பணி நிறைவு பெறும் நிலையில் இருப்பதால் விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.