உள்ளூர் செய்திகள்
வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 37). ஏகாம்பரம் நேற்று முன்தினம் நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக வேலூருக்கு வந்துள்ளார்.
நண்பரை பார்த்துவிட்டு சொந்த ஊர் செல்வதற்காக பழைய பஸ் நிலையத்திற்கு மண்டி வீதி வழியாகச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ஏகாம்பரத்திடம் இருந்து ரூ 3 ஆயிரம் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
ஏகாம்பரம் இதுகுறித்து வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மண்டித் தெருவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
ஏகாம்பரத்திடம் வழிப்பறியில் ஈடுபட்டது கஸ்பா வசந்தபுரம் நேரு நகரை சேர்ந்த மோகன் (21), பூங்காவனத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுபாஷ் (21) என தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 2 வாலிபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.