உள்ளூர் செய்திகள்
தலைமை ஆசிரியரை கண்டித்து மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

Published On 2022-02-09 14:35 IST   |   Update On 2022-02-09 14:35:00 IST
5-ஆம் வகுப்பு மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட தலைமை ஆசிரியரை கண்டித்து மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மேலாரணி மதுராதாங்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. 55 மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக காளியப்பன் (வயது 55) மற்றும் ஒரு ஆசிரியை பணியாற்றி வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த பள்ளி கடந்த 1-ந்தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டதால் மாணவ- மாணவிகள் பள்ளிக்கு வருகின்றனர். இதற்கிடையே பள்ளித் தலைமையாசிரியர் காளியப்பன் 5-ம் வகுப்பு மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக தகவல் பரவியது.

இதையடுத்து போளூரில் இருந்து மேல் சோழங்குப்பம் செல்லும் சாலையில் திடீரென 40-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் சிலர் நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

அப்போது போளூர் டி.எஸ்.பி. குணசேகரன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பள்ளி தலைமையாசிரியர் 5-ஆம் வகுப்பு மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டு பாலியல் தொந்தரவு செய்வதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.

உடனே டி.எஸ்.பி. இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரால் இனி எந்த பிரச்சனையும் வராது.

இதை தெரியப்படுத்தினால் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளிக்காமல் சாலை மறியல் போராட்டம் நடத்துவது தீர்வாகாது. முதலில் மனு கொடுங்கள்.

போராட்டத்தில் ஈடுபடுவது எந்த விதத்தில் நியாயம்? என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து டி.எஸ்.பி.குணசேகரன், போளூர் கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். இதில் தலைமையாசிரியர் மீது குற்றம் இருப்பது தெரியவந்ததால் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் பெற்றோர் போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்கு பதிவு செய்து தலைமையாசிரியர் காளியப்பனை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.

இந்த சம்பவம் கலசப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News