உள்ளூர் செய்திகள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

22-வது தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Published On 2022-02-09 12:14 IST   |   Update On 2022-02-09 12:14:00 IST
தமிழகத்தில் இதுவரை 9.71 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை கிண்டி கிங்ஸ் கொரோனா அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 4 சதவீதம் மட்டுமே மருத்துவமனை படுக்கையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆக்சிஜன் சிகிச்சையில் இருப்பவர்கள் 7 சதவீதம், தீவிர சிகிச்சை பிரிவில் இதுவரை 7சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். டெல்டா மற்றும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு 350 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

வரும் சனிக்கிழமை 22-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. நாளை பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெறும். 7.59 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மீதமுள்ள 1.5 லட்சம் பேர் நாளை நடைபெறும் முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

இளம் சிறார்களில் 80.4 சதவீதம் பேருக்கு முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 9.71 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

விரைவில் தமிழகத்தில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை அடைவோம்.

தமிழக அரசின் நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை. நீட் தேர்வு தமிழகத்திற்கு அவசியமில்லை என கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த அண்ணாமலை மாநில பாடதிட்டத்தில் படித்த மாணவர்களுக்கு கல்வி திறன் அதிகமாக உள்ளது. அதனால் நீட் தேர்வை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பார்கள். நீட் தேர்விற்கு பா.ஜ.க. போட்ட முடிச்சை அவர்களே அவிழ்ப்பார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News