உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டையில் 27 நெல் கொள்முதல் நிலையங்கள் 15-ந் தேதி முதல் செயல்படும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 27 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 15-ந் தேதி முதல் செயல்பட உள்ளது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டு சம்பா பருவ நெல் கொள்முதல் செய்ய 27 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வருகிற 15-ந் தேதி முதல் செயல்பட உள்ளது.
அரக்கோணம் தாலுகாவில் செய்யூர், இச்சிப்புத்தூர், சோகனூர், பள்ளூர், தக்கோலம், சோளிங்கர் தாலுகாவில் சோளிங்கர், கேசவனாங்குப்பம், கொடைக்கல், போலிப்பாக்கம், ஆற்காடு தாலுகாவில் வளையாத்தூர், அரும்பாக்கம், புதுப்பாடி குட்டியம், குப்பிடிசாத்தம், மேல் புதுப்பாக்கம், கீழ்ப்பாடி, நெமிலி தாலுகாவில் சிறுகரும்பூர், ஆயர்பாடி, சிறு வளையம், பானாவரம், அகவலம், ஜாகீர் தண்டலம் கண்டிகை, கோடம்பாக்கம், பனப்பாக்கம், சயனபுரம், வாலாஜா தாலுகாவில் அம்மூர், ஆயிலம் ஆகிய பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளது.
விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்துகொண்டு நெல் விற்பனை செய்ய ஏதுவாக ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இணையத்தில் விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், புல எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை எளிய முறையில் www.tncsc.tn.gov.in மற்றும் www.tncsc&edpc.in ஆகிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கொள்முதல் நிலையத்திற்கு நெல் மூட்டைகளை கொண்டு வரும் தேதி, வங்கிக் கணக்கு எண் மற்றும் வங்கிக் குறிப்பிடு எண், வருவாய் ஆவணங்கள், பட்டா, சிட்டா நகல் மற்றும் அடங்கலில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவசாயிகள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டவுடன் விவசாயிகள் நிலம் இருக்கும் கிராமங்களின் அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
இணையவழியில் மூலமாகவே ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் விவசாயிகளின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும்.