உள்ளூர் செய்திகள்
குடியாத்தம் நகராட்சியில் 165 பேர் போட்டி
குடியாத்தம் நகராட்சியில் 165 பேர் போட்டியிடுகின்றனர்.
குடியாத்தம்:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன.
இதில் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு தி.மு.க., அ.தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க., பி.ஜே.பி., ம.தி.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம்லீக், புரட்சி பாரதம், புதிய நீதி கட்சி, நாம்தமிழர், கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய குடியரசு கட்சி உள்பட பல்வேறு கட்சிகளின் சார்பில் திருநங்கை ஒருவர் உள்பட வேட்பாளர்கள் 234 பேர் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த 5-ந் தேதி குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது இதில் உரிய ஆவணங்கள் இல்லாததால் 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
வேட்பு மனுக்கள் வாபஸ் பெறும் நாளான நேற்று 61 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இறுதியாக குடியாத்தம் நகராட்சி 36 வார்டுகளுக்கு 165 பேர் களத்தில் உள்ளனர். இதில் ஒரு திருநங்கை ஆவார். குடியாத்தம் நகராட்சியில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 31 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.
அதன் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 2 இடங்களில் ஏணி சின்னத்தில், 2 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் கை சின்னத்தில் போட்டியிடுகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி உதயசூரியன் சின்னத்தில் ஓரிடத்திலும், ம.தி.மு.க. ஓரு இடத்தில் பம்பரம் சின்னத்தில் போட்டியிடுகிறது. அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 35 இடங்களில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறது.
இதில் தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு இடத்திலும், புரட்சி பாரதம் கட்சி ஒரு இடத்திலும், புதிய நீதி கட்சி ஒரு இடத்திலும், மனிதநேய ஜனநாயக கட்சி ஒரு இடத்திலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது. 5 வது வார்டில் சுயேச்சைக்கு ஆதரவாக அதிமுக போட்டியிடவில்லை.
குடியாத்தம் நகராட்சியில் நடைபெறவுள்ள தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 29 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 12 இடங்களிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்12 இடங்களிலும், நாம் தமிழர் கட்சி 8 இடங்களிலும் போட்டியிடுகிறது.
வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்ட பின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகி சின்னங்களும் ஒதுக்கப் பட்டதால் வேட்பாளர்கள் ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.