உள்ளூர் செய்திகள்
ஆற்றுத் திருவிழாவில் தரிசனம் செய்ய வந்த மூதாட்டியிடம் செயின் பறிப்பு
கலசப்பாக்கம் ஆற்றுத் திருவிழாவில் தரிசனம் செய்ய வந்த மூதாட்டியின் செயின் பறிக்கப்பட்டததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை அடுத்த கலசபாக்கம் செய்யாற்றில் ரதசப்தமியை முன்னிட்டு நேற்று ஆற்றுத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து சந்திரசேகரர் மற்றும் அம்பாள் பல்லக்கில் கலசபாக்கம் செய்யாற்றில் எழுந்தருளினர். அப்போது கலசபாக்கம் திரிபுரசுந்தரி உடனுறை திருமா முடீஸ்வரர் சுவாமிகளும் ஆற்றில் எழுந்தருளினார்.
ஆற்றின் நடுவில் அமைக்கப்பட்ட பந்தலில் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் செய்யாற்றில் சாமி தரிசனம் செய்ய வந்தனர்.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு அங்கு ஏராளமான திருவிழா கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் சாமி தரிசனம் வந்த 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணிடம், மர்ம நபர் 2 பவுன் செயினை பறித்து சென்று விட்டார். இதனால் அந்தப் பெண் கண்ணீர் விட்டு அழுதார்.
அவரை உடன் வந்த பெண் சமாதானம் செய்து அழைத்து சென்றார். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவிழாவை முன்னிட்டு போலீசார் பக்தர்கள் தங்கள் நகை மற்றும் உடமைகளை பாதுகாத்துக் கொள்ளும்படி ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்து கொண்டிருந்தனர்.
இருந்தபோதிலும் மர்ம நபர் பெண்ணிடம் நகை பறித்து சென்றது அங்கு வந்திருந்த பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்தது. பெண்ணிடம் நகை பறிப்பு நடைபெற்றபோது கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. அந்த நிலையிலும் நகை பறிக்க பட்டது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் திருவிழா நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தும்போது எளிதாக நகை பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி விடுகின்றன.இதற்காகவே வெளியூர்களிலிருந்து திருடர்கள் வருகை தருகின்றனர் என்று கூறப்படுகிறது.
எனவே திருவிழாக் காலங்களில் நகை அணிந்து செல்லும் பெண்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று அங்கு வந்திருந்த பக்தர்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி கலசபாக்கம் போலீஸ் நிலையத்தில் கேட்டபோது, நகை பறிப்பு சம்பவம் நடந்தது உண்மைதான். ஆனால் அதுபற்றி இன்னும் சம்பந்தப்பட்ட பெண் புகார் செய்யவில்லை.
அவர் புகார் செய்ததும் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மர்ம நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றுத் திருவிழா நடைபெற்ற போதும் 2 பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.