உள்ளூர் செய்திகள்
போலீஸ் போல் நடித்து மளிகை கடைக்காரரை கடத்திய கும்பல்
5 பவுன் நகையையும் பறித்து சென்றனர்.
கோவை:
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துவேல்(35). இவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் போத்தனூர் சிட்கோ எம்.ஜி.ஆர்.நகரில் தங்கி இருக்கிறார். அங்கு முத்துமாலை என்ற பெயரில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். அதற்கு அருகில் முத்துவேலின் தம்பி முத்துராஜா தனியாக மளிகை கடை வைத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் முத்துவேல் கடையில் இருந்தார். அப்போது காரில் 4 பேர் வந்தனர். அவர்கள் தங்களை தனிப்படை போலீசார் என அறிமுகப்படுத்தி கொண்டனர். புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை செய்ய வேண்டும் என வீடு மற்றும் கடைகளில் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு புகையிலைப்பொருட்கள் இருந்ததாக தெரிகிறது. உடனே அவர்கள் விசாரிக்க வேண்டும், வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறி முத்துவேலின் தம்பி முத்துராஜை காரில் அழைத்து சென்றனர்.
பின்னர் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் வைத்து ரூ.3 லட்சம் கொடுத்தால் வழக்குப்பதிவு செய்யாமல் விட்டு விடுகிறோம் என மிரட்டியுள்ளனர். பின்னர் அவரை திரும்பவும் வீட்டுக்கு அழைத்து வந்த கும்பல் வீட்டுக்குள் புகுந்து வங்கி புத்தகம், ஏடிஎம் கார்டு ஆகியவற்றை எடுத்து கொண்டு வெற்று காசோலையில் கையெழுத்து பெற்றுள்ளனர்.
மேலும் வீட்டில் இருந்த 5 பவுன் நகை, செல்போன் ஆகியவற்றை எடுத்துவிட்டு மீண்டும் முத்துராஜாவை காரில் அழைத்து சென்றனர். பின்னர் அவரிடம் செல்போனை கொடுத்துவிட்டு சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனியில் மிரட்டி இறக்கி விட்டு அந்த கும்பல் காரில் தப்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த முத்துராஜாவுக்கு அதன் பின்னர்தான் அவர்கள் போலீஸ் இல்லை, ஏமாற்று கும்பல் என தெரியவந்தது.
இதனைதொடர்ந்து இது தொடர்பாக முத்துவேல் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் தப்பி சென்ற 4 பேர் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.