உள்ளூர் செய்திகள்
வனப்பகுதியில் வீசப்படும் பிளாஸ்டிக்கால் யானை, காட்டெருமை உயிரிழக்கும் அபாயம்
வனப்பகுதியில் இருந்து உணவு, தண்ணீரை தேடி விலங்குகள் வெளியில் வருவது அதிகமாகி விட்டது.
கோவை:
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருப்பதால் கோவை, நீலகிரி மாவட்டத்தில் யானைகள், காட்டெருமைகள் நடமாட்டம் அதிகம் காணப்படும். காடுகளில் ஏற்பட்டு வரும் பெரும் மாற்றத்தால், கடந்த சில ஆண்டுகளாக யானைகள், காட்டெருமைகள் உணவு, தண்ணீரை தேடி வெளியில் வருவது அதிகமாகிவிட்டது.
கோவை மருதமலை பகுதியை சுற்றி காட்டு யானைகள் எப்போதுமே நடமாடிக் கொண்டிருக்கும். மருதமலை அடிவாரம் வரை மக்கள் குடியமர்ந்ததாலும், கோவிலுக்கு பொது மக்கள் அதிகம் வருவதாலும் குப்பை கள் குவிய தொடங்கின. வன உயிரின ஆர்வலர்கள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருதமலை பகுதியை ஆய்வு செய்தனர்.
அப்போது யானை சாணத்தில் இருந்து பால் கவர், மாஸ்க், மசாலா கவர், பிஸ்கெட் கவர், ரிப்பன், நாப்கின், பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பொருள்களை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதேபோல கோத்தகிரியில் காட்டெருமைகள் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததால் 3-க்கும் மேற் பட்ட காட்டெருமைகள் இறந்தது பரிசோதனையில் தெரியவந்தது.
கோத்தகிரி தாலுகா அரவேணு பகுதியில் இருந்து அளக்கரை செல்லும் சாலையில் தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் காட்டெருமை ஒன்று இறந்து கிடந்தது. இதை கண்ட பொதுமக்கள் கட்டபெட்டு வனத்துறையினருக்கு தகவல் தெவித்த னர். அதன்பேரில் சென்ற வனத்துறையினர் இறந்து கிடந்த காட்டெருமையை பார்வையிட்டனர் பின்னர் கோத்தகிரி கால்நடை மருத்துவர் வரவழைக் கப்பட்டு காட்டெருமை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது பின்னர் அதே பகுதியில் தோன்றி உடல் புதைக்கப்பட்டது.
இதுகுறித்து வனத் துறையினர் கூறியதாவது:- காட்டெருமை உடல் பிரேத பரிசோதனை செய்தபோது இறந்தது 3 வயது மதிக்கத்தக்க பெண் காட்டெருமை என தெரியவந்தது. அதன் வயிற்றில் அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது. இதன் காரணமாக காட்டெருமை உயிரிழந்து உள்ளது.
இதுபோன்ற சில மாதங்களில் 3-&க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் இறந்து உள்ளது. எனவே பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் சாலை ஓரங்களிலும் வீசுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் கூறியதாவது:-
கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்துக்கு உட்பட்ட சாலையில் தன்னார்வலர்கள் உடன் இணைந்து அனைத்து பகுதிகளையும் வனத்துறையினர் தூய்மை செய்தோம்.
இதேபோல கோவை மாவட்டத்தில் வனத்துறை சார்பாக பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் தன்னார்வலர்களுடன் சேர்ந்து அகற்றி வருகிறோம். சமீபத்தில் கணுவாய் உள்ளிட்ட ரெயில்வே பாதைகளின் அருகில் தன்னார்வலர்களோடு இணைந்து குப்பைகளை அகற்றி வருகிறோம். மதுக் கரை உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்ற முடிவு செய்துள்ளோம்.
யானைகள் அபார மோப்ப சக்தி உடையவை. யானைகள் வேண்டுமென்றே பிளாஸ் டிக்கை உட்கொள்ளாது. யானைகள் அதிகமான உணவை உட்கொள்ளும். யானைகள் வயிற்றில் உணவை ஜீரணிக்க ஒரே ஒரு அறைதான் இருக்கும். எனவே, குறைவான அளவு பிளாஸ்டிக் வயிற்றிலேயே தங்க வழியில்லை.
அவற்றின் குடல் பெரிது என்பதால் சாணத்தோடு சேர்ந்து வெளியே வந்துவிடும். இருப்பினும், யானைகள் தொடர்ச்சியாக உணவோடு சேர்த்து தெரியாமல் அதிக அளவிலான பிளாஸ்டிக் உட்கொள்ளும்போது, அவை வெளியேற வழியில்லாமல் அவற்றுக்கு பாதிப்பு ஏற்படலாம்.
காட்டெருமை, ஆடு, மாடு போன்றவற்றின் வயிற்றில் உணவை ஜீரணிக்க 4 அறைகள் இருக்கும். அவற்றின் குடல் சிறியதாக இருக்கும். எனவே, அவை பிளாஸ்டிக்கை சாப்பிடும்போது குடலில் அடைப்பை ஏற்படுத்தும். பின்னர், மூச்சுவிடமுடியாமல் வயிறு வீக்கம் ஏற்பட்டு அவை உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.
வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் பிளாஸ்டிக் கவர்களில் உணவுப்பொருட்கள் போடக்கூடாது. பொதுமக்களும் பிளாஸ்டிக் கவர்களில் உணவுப் பொருட்களை அப்படியே தூக்கி எறிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.