உள்ளூர் செய்திகள்
போலீஸ் வாகனம்

கோவை போலீசுக்கு ஜி.பி.எஸ்.கருவி பொருத்திய 17 புதிய வாகனம்

Published On 2022-02-06 16:16 IST   |   Update On 2022-02-06 16:16:00 IST
வாகனம் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கோவை:

காவல்துறையின் 2021-22-ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையில், அனைத்து போலீஸ் கமிஷனர் அலுவலகங்களின் கீழ் செயல்படும் போலீஸ் நிலையங்களுக்கு தலா 1 நான்கு சக்கர ரோந்து வாகனம் என மொத்தம் 106 ரோந்து வாகனங்கள் ரூ.10 கோடி செலவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் ரூ.9 கோடியே 76 லட்சத்து 67 ஆயிரத்து 340 மதிப்பீட்டிலான 106 மகிந்திரா பொலிரோ நியோ வாகனங்களை வழங்கிடும் விதமாக, முதற்கட்டமாக ஆவடி மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக பயன்பாட்டுக்காக 20 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்

இந்த நிலையில் கோவை மாவட்டத்திற்கு 17 புதிய ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் கூறியதாவது:-  

கோவை மாவட்டத்திற்கு தற்போது முதல் கட்டமாக 17 புதிய ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை பதிவு செய்யப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வரும். இந்த காவல் ரோந்து வாகனத்தில் பொது அறிவிப்பு செய்யும் ஒலிபெருக்கி மற்றும் ரோந்து வாகனத்தை தொலைவில் இருந்து அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் மூன்று வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

இவ்வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன்மூலம் காவல் கட்டுப்பாட்டறையில் இருந்து இந்த வாகனத்தின் நகர்வை அறியவும், 

அவசர உதவி தேவைப்படும் இடங்களுக்கு செல்லவும் அருகில் உள்ள ரோந்து வாகனத்திற்கு காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கட்டளைகளை அளிக்கவும் முடியும்.  இதன்மூலம் பொதுமக்களிடம் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு வரும் அவசர உதவி அழைப்புகளுக்கு குறைந்தபட்ச கால அவகாசத்தில் சம்பவ இடங்களுக்கு செல்ல முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Similar News