உள்ளூர் செய்திகள்
கோவையில் ஆஸ்பத்திரி ஊழியரை தாக்கி வெள்ளி நகை பறித்து சென்ற வாலிபர்கள்
லிப்ட் கேட்பது போல் நடித்து தங்கள் கைவரிசை காட்டினர்.
கோவை:
கோவை கவுண்டம்பாளை யம் சரவணாநகரை சேர்ந்தவர் ராகுல் அகமத்(வயது 34). இவர் கோவையில் உள்ள கண் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று மாலை வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் சாய்பாபா காலனி அருகே சென்ற போது வாலிபர் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். பைக்கை நிறுத்திய ராகுல் அகமத் அந்த வாலிபரை ஏற்றி சென்றுள்ளார்.
சிறிது தூரம் சென்றவுடன் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் கத்தியை ராகுல் அகமத்தின் இடுப்பில் வைத்து மிரட்டி பைக்கை நிறுத்த சொன்னார். அவரும் பைக்கை நிறுத்தினார்.
அப்போது அங்கு மறைந்திருந்த மேலும் 3 பேர் ஓடி வந்து ராகுல் அகமத்திடம் பணம் கேட்டு மிரட்டினர். பின்னர் அவரை உருட்டுக்கட்டையால் தாக்கி அவர் வைத்திருந்த பணம் மற்றும் வெள்ளி செயினை பறித்தனர்.
இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி அங்கிருந்து தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக ராகுல் அகமத் சாய்பாபாகாலனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில், ஆஸ்பத்திரி ஊழியரை தாக்கி பணம், வெள்ளி பறித்து சென்றது சாய்பாபா காலனி கேகேபுதூர் கிருஷ்ணம்மாள் தெருவை சேர்ந்த விக்னேஷ்(23) என்பது தெரியவந்தது.
போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய பிரபாகரன், அஸ்வின், காட்வின் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.