உள்ளூர் செய்திகள்
சிவகிரி தேவிபட்டணம் கீழூர் ராமசாமியாபுரத்தை சேர்ந்தவர் முதியவர் முனியாண்டி நேற்று நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள ஆட்டோவில் சென்றார். அப்போது அவர் ஆட்டோ கவிழ்ந்து பலியானார்.
சிவகிரி:
சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணம் கீழூர்ராமசாமியாபுரத்தை சேர்ந்தவர் முனியாண்டி (வயது74). இவர் நேற்று தேவிபட்டணத் தில் நடந்த ஒரு நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டார்.
பின்னர் ஒரு ஆட்டோவில் முனியாண்டி வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது புளியங்குடி சிந்தாமணியை சேர்ந்த 4 பேர், செல்லும் வழியில் சிவகிரி பஸ் நிலை யத்தில் இறக்கி விட்டு செல்லுமாறு கூறினர்.
இதையடுத்து முனியாண்டியுடன் சேர்த்து 5 பேரும் ஆட்டோவில் ஏறி சென்றனர். ஆட்டோவை குருவையா என்பவர் ஓட்டி சென்றார். மதுரை- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் வடக்கில் இருந்து தெற்கு சிவகிரியை நோக்கி ஆட்டோ சென்றது.
விஸ்வநாதபேரி துணை மின் நிலையம் அருகே ஆட்டோ சென்றபோது திடீரென சாலையில் கவிழ்ந்து முனியாண்டிக்கு காயம் ஏற்பட்டது. கவிழ்ந்து கிடந்த ஆட்டோவை தூக்கி நிறுத்தி காயம்பட்ட முனியாண்டியை ஏற்றிக்கொண்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தபோது பெட்ரோல் பங்க் பாலத்தின் அருகே சாலையின் கீழ் புறத்தில் ஆட்டோ மீண்டும் கவிழ்ந்தது.
விபத்தில் படுகாயமடைந்த முனியாண்டியை மற்றொரு வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்று சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு முனியாண்டி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் மகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.