உள்ளூர் செய்திகள்
ஆரணியில் நிறுத்தி வைக்கப்பட்ட சுயேட்சை வேட்பாளர் மனு 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஏற்பு
ஆரணியில் நிறுத்தி வைக்கப்பட்ட சுயேட்சை வேட்பாளர் மனு 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர மன்ற 1-வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் தங்கராஜ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். நேற்று அவரது மனு பரிசீலனை செய்யப்பட்டது.
காலையில் சுயேட்சை வேட்பாளரின் மனுவில் ஒருசில விவரத்தை படிவத்தில் பூர்த்தி செய்யவில்லை என கூறி மனுவை தேர்தல் அதிகாரி நிறுத்தி வைத்தார். அப்போது வேட்பாளரின் கேள்விக்கு அதிகாரிகள் சரிவர பதிலக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தேர்தல் நடத்தும் அலுவலர் தமிழ்செல்வி வாகனத்தில் ஏறி வெளியே செல்ல முயன்றார். அப்போது சுயேட்சை வேட்பாளர் அவரது ஆதரவாளருடன் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வாகனத்தை மறித்து நகராட்சி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
ஆரணி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் வேட்பு மனு ஏற்கும் வரையில் போராட்டத்தை கைவிட முடியாது என்று சுயேட்சை வேட்பாளர் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆரணி நகர மன்ற 1-வது வார்டு சுயேட்சை வேட்பாளரின் மனுவை ஏற்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.
இதன் பின்னர் மறியலை கைவிட்டனர். 8மணி நேரம் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என கூறி மகிழ்ச்சியுடன் திரும்பி சென்றனர்.
ஆரணி நகராட்சியில் 198 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்த நிலையில் 2 பேர் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 196 பேர் வேட்பாளர்களாக உள்ளனர்.