உள்ளூர் செய்திகள்
பாலாற்றில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரர் பைக் 2 மாதங்களுக்கு பிறகு மீட்பு
விரிஞ்சிபுரம் பாலாற்றில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரர் பைக் 2 மாதங்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.
வேலூர்:
பாலாற்றில் கடந்த நவம்பர் மாதம் கரைபுரண்டு வெள்ளம் ஓடியது. கே.வி.குப்பத்தை அடுத்த வடுகன்தாங்கலை சேர்ந்த ராணுவவீரர் மனோகரன் (வயது 32).
இவர் நவம்பர் மாதம் 18-ந்தேதி மோட்டார் சைக்கிளில் விரிஞ்சிபுரம் பாலாற்று தரைப்பாலத்தை கடக்க முயன்றார்.
பாலத்தை மூழ்கியபடி வெள்ளம் சென்று கொண்டிருந்தது. அதனால் அந்த பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டிருந்தது.
ஆனால் மனோகரன் அதனை பொருட்படுத்தாமல் மோட்டார் சைக்கிளில் பாலத்தை கடக்க முயன்றார். சிறிதுதூரம் சென்ற நிலையில் வெள்ளத்தின் வேகத்தில் மோட்டார் சைக்கிளுடன் அவர் பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்து பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.
வேலூர் தீயணைப்பு வீரர்கள், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் பாலாற்றின் பல்வேறு பகுதிகளில் படகுகள் மூலம் பல நாட்கள் தேடியும் மனோகரனை கண்டுபிடிக்க முடியவில்லை.
பாலாற்றின் இருகரைகளையும் தொட்டப்படி வெள்ளம் பாய்தோடியதால் மனோகரன் மற்றும் அவரின் மோட்டார் சைக்கிளை கண்டுபிடிப்பது பெரும் சவாலாக இருந்தது.
இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் சுமார் 2 மாதங்களுக்கு பின்னர் தரைப்பாலத்தில் இருந்து 150 அடி தூரத்தில் பாலாற்று மணலில் புதைந்தபடி மோட்டார் சைக்கிள் ஒன்று கிடந்தது.
இதனை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று மோட்டார் சைக்கிளை மீட்டு விசாரித்தனர்.
இதுகுறித்து மனோகரனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டு அந்த மோட்டார் சைக்கிள் மனோகரனுக்கு சொந்தமானது என்று உறுதி செய்தனர்.
அதைத்தொடர்ந்து விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்துக்கு அந்த மோட்டார் சைக்கிள் எடுத்து செல்லப்பட்டது.