உள்ளூர் செய்திகள்
தேர்தல் பார்வையாளரிடம் அ.தி.மு.க. புகார்
வேலூர் மாநகராட்சி 24-வது வார்டு உள்பட அ.தி.மு.க. வேட்பாளர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் தேர்தல் பார்வையாளரிடம் அ.தி.மு.க. புகார் அளிக்க மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் திரண்டு வந்தனர்.
மேலூர்:
-
வேலூர் மாநகராட்சி 2--வது மண்டலத்துக்கு உட்பட்ட 24 வது வார்டில் அ.தி.மு.க., வேட்பாளர் சி.கே.எஸ்.வினோத்குமார், தி.மு.க., வேட்பாளராக சுதாகரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
வேட்புமனு பரிசீலனை நேற்று நடந்தது. அப்போது தி.மு.க., வேட்பாளர் சுதாகர் அ.தி.மு.க., வேட்பாளர் வினோத்குமார் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஒரு மனு கொடுத்தார்.
அதில் வினோத்குமார் ஒப்பந்ததாரர் பணி எடுத்து செய்கிறார் எனக் குறிப்பிட்டிருந்தார். இதனால் வேட்புமனு பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டது. மாலை பரிசீலிக்கப்படும் என அதிகாரி தெரிவித்தார்.
இதுகுறித்து தகவலறிந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, பொருளாளர் எம்.மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலூர் மண்டல செயலாளர் ஜனனீ.பி.சதீஷ் குமார், முன்னாள் தொகுதி செயலாளர் சி.கே.சிவாஜி உள்பட நிர்வாகிகள் 2-வது மண்டலத்திற்கு வருகை தந்தனர். அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது வேட்பாளர் வினோத்குமார் ஒப்பந்ததாரர் பணியை தான் செய்யவில்லை என்றும் தன்னுடைய தந்தை செய்கிறார் என்றும் அதற்கான ஆவணங்களை கொண்டுவந்து காண்பித்தார்.
ஆனால் உதவித் தேர்தல் அலுவலர் வசந்தி 24-வது வார்டு வேட்புமனுவை மாலையில் பரிசீலிப்பதாக தெரிவித்தார்.
அதனால் அ.தி.மு.க., நிர்வாகிகள் அங்கேயே முகாமிட்டு இருந்தனர். மாலை 4 மணிக்கு உதவி தேர்தல் அலுவலர் வேட்பாளர் வினோத்குமாரிடம் அவருடைய தந்தை சி.கே. சிவாஜியின் பெயரில் உள்ள ஒப்பந்த பத்திரங்கள் உள்பட பல்வேறு ஆவணங்களை கேட்டார். அதற்கெல்லாம் உரிய ஆவணங்களை வேட்பாளர் வினோத்குமார் உதவி தேர்தல் அதிகாரியிடம் வழங்கினார்.
இந்த நிலையில் அ.தி.மு.க.வினர் அங்கு அதிகளவில் கூடியதால் ஆயுதப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். தொடர்ந்து மனு குறித்து பரிசீலனை செய்யப்பட்டது. மாலை 4.45 மணி வரை மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதா? அல்லது நிராகரிக்கப்பட்டதா? என்று தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் மாலை 4.50 மணிக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வசந்தி, இது தொடர்பாக மாநகராட்சி தேர்தல் அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்து, அங்கிருந்து ஜீப்பில் ஏறி புறப்பட ஆயத்தமானார்.
இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வினர் அவரது ஜீப்பை முற்றுகையிட்டனர். முடிவு அறிவிக்கப்படாமல் எங்கும் செல்லக் கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வேட்பாளர் வினோத்குமார் உள்பட நிர்வாகிகள் 2-வது மண்டல அலுவலக நுழைவுவாயில் கேட் அருகே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் அது குறித்து உதவி தேர்தல் அலுவலர் வசந்தியிடம் கூறினார்.
பின்னர் அவர் ஜீப்பில் இருந்து இறங்கி தன்னுடைய அறைக்கு சென்றார். 24-வது வார்டு தி.மு.க., அ.தி.மு.க., வேட்பாளர்களை அழைத்தார்.
அ.தி.மு.க., வேட்பாளர் வினோத்குமாரின் மனுவை நிராகரிப்பதாக கூறி அவரை வெளியே அனுப்பி விட்டனர் .அவர் காரணம் கேட்டதற்கு எதுவும் தெரிவிக்கவில்லை என கூறினார்.
இந்த சம்பவத்தால் வேலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால் இதுகுறித்து அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஜனனீ சதீஷ்குமார், மைக்கேல், பாலச்சந்திரன், அண்ணாமலை, தாஸ், சி.கே.சிவாஜி ஆகியோர் வேலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் பிரதாப்பை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அதில் 24-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் சி.கே.எஸ்.வினோத்குமார், 25-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் சீனிவாசன், 7-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் தனலட்சுமி ரவி ஆகியோரது வேட்புமனு வேண்டுமென்றே நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுக்களை ஏற்று அவர்கள் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து தேர்தல் பார்வையாளர் கூறுகையில்:-
மாநகராட்சி தேர்தல் அதிகாரி, சத்துவாச்சாரி உதவி தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் அறிக்கை கேட்டுள்ளேன் அவர்கள் அறிக்கை அனுப்பிய பிறகு 2 அறிக்கைகளையும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவேன் அவர்கள் இறுதி முடிவு எடுப்பார்கள் என்றார்.