உள்ளூர் செய்திகள்
பூண்டி ஏரி

பூண்டி ஏரியில் பொதுப்பணித்துறையினர் ஆய்வு

Published On 2022-02-06 14:41 IST   |   Update On 2022-02-06 14:41:00 IST
பூண்டி ஏரியில் உபரி நீர் திறந்து விடப்படும் மதகுகளின் திடத்தன்மை பற்றி ஆராய்ந்த அதிகாரிகள், மதகுகளில் ஆங்காங்கே தண்ணீர் கசிவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர்.
ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், ஜமீன்கொரட்டூர் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக திறந்து விடப்படுவது வழக்கம்.

அதே போல் பேபி கால்வாய் வழியாக சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது.

கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழையால் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.

இந்தநிலையில் பொதுப் பணித்துறை, நீர்வளத்துறை, மண் பரிசோதனை துறை பொறியாளர்கள் குழு நேற்று பூண்டி ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

முதலில் இணைப்பு கால்வாய் மற்றும் பேபி கால்வாயை பார்வையிட்டு அதிகபட்சமாக எத்தனை கன அடி தண்ணீர் திறக்கலாம் என்ற விவரத்தை கேட்டறிந்தனர். இதைத் தொடர்ந்து கால்வாயில் ஆங்காங்கே சேதமடைந்த கரைகளை சீர்செய்ய உத்தரவிட்டனர்.

பின்னர் உபரி நீர் திறந்து விடப்படும் மதகுகளின் திடத்தன்மை பற்றி ஆராயப்பட்டது. மதகுகளில் ஆங்காங்கே தண்ணீர் கசிவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர்.

ஆய்வின்போது பொதுப்பணித்துறையின் கொசஸ்தலை ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் உதவியாளர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர். பூண்டி ஏரியின் மொத்த உயரம் 3231 மி.கன அடி. தற்போது ஏரியில் 2736 மி. கன அடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News