உள்ளூர் செய்திகள்
20 ஆண்டுகளுக்கு பிறகு மின்சாரம் கிடைத்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே 20 ஆண்டுகளுக்கு பிறகு மின்சாரம் கிடைத்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே கணபதி சுந்தர நாச்சியார்புரம் கிராமம் உள்ளது. இங்குள்ள காலனி வீடுகளில் சுமார் 10 குடும்பங்களுக்கு மேல், சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சாரம் இல்லாத நிலையில் வசித்து வந்தனர்.
பலமுறை அரசுக்கும், அதிகாரிகளுக்கும் மனு செய்தும் பலனில்லாமல் போய்விட்டது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் மாவட்ட கலெக் டருக்கு உத்தரவு பிறப்பித்து உடனடியாக மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யுமாறு கூறப்பட்டது.
மின் வாரிய அதிகாரிகள் வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து துரிதமாக பணியாற்றி பாதைகளும் அமைத்து மின் கம்பங்களும் அமைத்து வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கினர்.
இன்னும் நான்கு வீடுகளுக்கு மட்டும் சரியான பாதை இல்லாமலும் மின் கம்பங்கள் நடுவதற்கு இடமில்லாத நிலையில் விரைவில் ஆவன செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருளில் வாழ்ந்து வந்த அந்த கிராமமக்கள் மின்சாரம் வழங்க வழிவகுத்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர். மேலும் இதற்கு விரைவாக செயல்பட்ட தமிழக அரசுக்கும் மாவட்ட ஆட்சியர் உள்பட அதிகாரிகளும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.