உள்ளூர் செய்திகள்
கழிவுநீரை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்
அரசியல் கட்சியினர் தேர்தல் நேரத்தில் மட்டுமே வந்து வாக்கு கேட்கின்றனர். பின்னர் தங்களை கண்டு கொள்வதில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் செல்லாண்டியம்மன் துறை பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். இந்த குடியிருப்பில் பல மாதங்களாக கழிவு நீர் தேங்கி உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நோய்த்தாக்குதலுக்கு உள்ளாவதாகவும், இதுதொடர்பாக பல முறை மனு அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அரசியல் கட்சியினர் தேர்தல் நேரத்தில் மட்டுமே வந்து வாக்கு கேட்கின்றனர்.
பின்னர் தங்களை கண்டு கொள்வதில்லை எனவும் புகார் தெரிவித்தனர். இந்தநிலையில் உடனடியாக தங்கள் பகுதியில் தேங்கி உள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் இளைஞர்கள் செல்லாண்டியம்மன் துறை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற திருப்பூர் தெற்கு போலீசார் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.