உள்ளூர் செய்திகள்
தேர்தல் விதிமுறையை மீறியதாக 2441 வழக்குகள் பதிவு
குமரி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறையை மீறியதாக 2441 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
நர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான வேட்பாளர்கள் இறுதி பட்டியல் நாளை (7-ந் தேதி) வெளியிடப்படுகிறது.
தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகத்தை தடுக்கும் வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் 75 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தவிர மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கட்டுப்பாட்டு ஆறைகள் மற்றும் பறக்கும் படைகள், தேர்தல் அதிகாரிகளுக்கு வந்த புகார்களின் அடிப் படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு பேனர்கள், கட் அவுட், போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளன.
அந்த வகையில் பொது இடங்களில் போஸ்டர்கள், பேனர்கள் மற்றும் தனியார் இடங்களில் போஸ்டர்கள், பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
நேற்று(5-ந் தேதி) வரை மாவட்டம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் தேர்தல் விதிமுறைகள் மீறியதாக மொத்தம் 2,441 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் 51 பேரூராட்சிகளில் பொது சுவர்களில் விளம்பரம் செய்ததாக 127 வழக்குகள், போஸ்டர்கள் ஒட்டியதாக 1227 வழக்குகள், தனியார் இடங்களில் விதிமுறை மீறியதாக 345 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நகராட்சிகளில் பொது இடங்களில் விதிமுறைகள் மீறி போஸ்டர்கள், பேனர்கள், விளம்பரங்கள் வைத்ததாக 149 வழக்குகள், தனியார் இடங்களில் விதிமுறை மீறியதாக 194 வழக்குகள், நாகர்கோவில் மாநகராடசியில் பொது இடங்களில் விதிமுறை மீறியதாக 32 வழக்குகள், தனியார் இடங்களில் விதி முறை மீறியதாக 510 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நகராட்சிகளை பொறுத்தவரை கொல்லங்கோடு நகராட்சியில் இதுவரை 57 புகார்களும், குளச்சல் நகராட்சியில் 80 புகார்களும், குழித்துறை நகராட்சியில் 126 புகார்களும், பத்மநாபபுரம் நகராட்சியில் 80 புகார்களும் வந்துள்ளன.
நேற்று (5-ந்தேதி) கட்டுப்பாட்டு அறைக்கு வந்த 5 புகார்களில், 4 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.