உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

அ.தி.மு.க.- எஸ்.டி.பி.ஐ.கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி

Published On 2022-02-06 12:36 IST   |   Update On 2022-02-06 12:36:00 IST
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியில் அ.தி.மு.க.- எஸ்.டி.பி.ஐ.கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கியது.

கடந்த 4-ந்தேதியுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது. இந்த 18 வார்டுகளிலும் மொத்தம் 61 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த வேட்புமனுக்கள் அனைத்தும் நேற்று கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் பரிசீலனைக்கு எடுக்கப் பட்டது.

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலரும் தேர்தல் அதிகாரியுமான ஜீவநாதன் முன்னிலையில் 1-வது வார்டு முதல் 9-வது வார்டு வரையிலான 9-வார்டுகளுக்கான உதவி தேர்தல் அதிகாரியும்அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலருமான ஆனந்தவிஜயன்,

 10-வது வார்டு முதல் 18-வது வார்டு வரையிலான 9-வார்டுகளுக்கான உதவித் தேர்தல் அதிகாரியும் மாவட்ட உணவு வழங்கல் அலுவலக துணை தாசில்தாருமான மேரி ஸ்டெல்லா ஆகியோர் இந்த18 வார்டுகளிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்தனர். 

அப்போது 15-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்து இருந்த ராஜ்குமார் என்பவரின் வேட்புமனுவும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துஇருந்த ஆன்றனி என்பவரின் வேட்புமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. 

இதில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ்குமார் என்பவர் அவரது பெயரில் பேரூராட்சி கடையை குத்தகைக்கு எடுத்து உள்ளார்என்ற காரணத்துக்காகவும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் ஆன்றனி தனது குடும்ப உறவுகளை வேட்புமனுவில் மறைத்த காரணத்துக்காகவும் அவர்கள் இருவரின் வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது தெரியவந்தது. 

இந்த 2 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு இந்த வார்டில் பூலோகராஜா (தி.மு.க.), விர்ஜின்மேரி, சாந்தி ஆகிய 3 பேர் மட்டுமே களத்தில் உள்ளனர். மேலும் இந்த2 வேட்பாளர்களின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதால் கன்னிவாடி பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளிலும் 59 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகிறார்கள்.

Similar News