உள்ளூர் செய்திகள்
குடியரசு தின அலங்கார ஊர்தி முன்பு கிராமிய கலை நிகழ்ச்சி நடந்தது.

குடியரசு தின அலங்கார ஊர்தியை 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்

Published On 2022-02-06 12:31 IST   |   Update On 2022-02-06 12:31:00 IST
கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள குடியரசு தின அலங்கார ஊர்தியை 2- வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.
கன்னியாகுமரி:

இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பைப் பறைசாற்றும் வகையிலும் போற்றி பெருமைப்படுத்தும் வகையிலும் தமிழக அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டத்தில் “விடுதலைப் போரில் தமிழகம்“ என்ற தலைப்பில் 3 அலங்கார ஊர்திகள் இடம்பெறும் என்றும்

சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை பொதுமக்கள் மற்றும் இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள ஏதுவாக தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு அந்த அலங்கார ஊர்திகள் மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும் என்றும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் 3 அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டு அணிவகுப்பில் பங்கேற்றன. 

இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுஉள்ளது. அவற்றில் ஒரு அலங்கார ஊர்தி கன்னியாகுமரிக்கு நேற்று வந்தது. வடிவமைக்கப்பட்ட அந்தஅலங்கார ஊர்தியில் வீரமங்கை வேலுநாச்சியாரின் சுதந்திரப் போராட்ட காட்சிகள் மற்றும் மருதுசகோதரர்கள் தூக்கிலிடப்படும் காட்சிகள் மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் இடம் பெற்றிருந்தன. 

தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்காக கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு அமைந்துஉள்ள முக்கோண பூங்கா அருகில் காட்சிக்காக நிறுத்தப்பட்டு உள்ளது. தமிழக அரசால் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டுஉள்ள இந்த அலங்கார ஊர்தியினை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் இளைஞர்கள் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் உள்பட அனைவரும் பார்வையிட்டுசென்றனர். 

இன்று 2-வது நாளாக அந்த அலங்கார ஊர்தி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக அதே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுஉள்ளது. இந்த அலங்கார ஊர்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் மகுட கச்சேரி, கணியான் கூத்து, நையாண்டி மேளம், பெண்களின் தப்பாட்டம், மாணவ& மாணவிகளின் நடன நிகழ்ச்சி, சிலம்பாட்டம் போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. 

இந்த குடியரசுதின அலங்கார ஊர்தி முன்பு சுற்றுலா பயணிகள் நின்று தங்களது செல்போன் மூலம் செல்பி எடுத்துக்கொண்டனர்.

Similar News