உள்ளூர் செய்திகள்
மீட்கப்பட்ட ராமர் கற்சிலையை காணலாம்.

ரூ.1 கோடி மதிப்புள்ள ராமர் சிலை மீட்பு- போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு

Published On 2022-02-06 08:22 IST   |   Update On 2022-02-06 08:22:00 IST
சென்னையில் இருந்து ஜெர்மனி நாட்டுக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான ராமர் சிலையை போலீசார் மீட்டனர்.
சென்னை:

சென்னை ஆலந்தூரில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில், ராமர் கற்சிலை பதுக்கிவைக்கப்பட்டு ஜெர்மனி நாட்டுக்கு கடத்தி செல்ல இருப்பதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி உத்தரவின் பேரில் ஐ.ஜி. தினகரன் நேரடி மேற்பார்வையில் தனிப்படை போலீசார் அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தினார்கள்.

இதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 அடி அகலம், 2 அடி உயரத்துடன் கூடிய புராதன ராமர் கற்சிலை சிக்கியது. இந்த சிலையை வைத்திருக்க கூடிய ஆவணங்கள் அந்த நிறுவனத்திடம் இல்லாததால், அதனை கைப்பற்றினர். இந்த சிலையின் மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சிலையின் தொன்மை, எந்த கோவிலில் திருடப்பட்டது, கடத்தல் முயற்சியில் யார்-யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஜெர்மனி நாட்டுக்கு கடத்தப்பட இருந்த சிலையை மீட்ட போலீசாரை தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெகுவாக பாராட்டினார்.

Similar News