உள்ளூர் செய்திகள்
வழக்கு

கட்சி மாறினால் வெட்டுவேன் என மிரட்டிய வழக்கு: போலீசுக்கு பயந்து ஓடியபோது அ.தி.மு.க. நிர்வாகியின் கால் முறிந்தது

Published On 2022-02-05 15:39 IST   |   Update On 2022-02-05 15:39:00 IST
கட்சி மாறினால் வெட்டுவேன் என மிரட்டிய சாத்தூர் அ.தி.மு.க. நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அ.தி.மு.க. சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி பங்கேற்றார்.

அந்த கூட்டத்தில் கட்சியினர் மத்தியில் அவர் பேசும்போது, ‘உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் யாராவது கட்சி மாறினால் வீடு தேடி வந்து வெட்டுவேன்’ என்று கூறி இருக்கிறார்.

அவர் பேசிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சாத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாண்டியன் புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகி சண்முகக்கனி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அவர் மீது கொலை மிரட்டல் 506(1), ஆயுதங்களை பயன்படுத்தி மிரட்டும் வகையில் பேசுவது 505 (1பி), இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியது 153 (ஏ) ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவரிடம் விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில் அந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியில் உள்ள சண்முகக்கனியின் வீட்டுக்கு போலீசார் சென்றனர். போலீசார் வருவதை அறிந்த சண்முகக்கனி வீட்டின் மாடிக்கு வேகமாக சென்றுள்ளார்.

அப்போது அவர் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு இடது கால் முறிந்தது. இதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் அங்கிருந்து மீட்டு கோவில்பட்டி பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Similar News