உள்ளூர் செய்திகள்
அமிர்தி வன உயிரியல் பூங்கா மீண்டும் திறப்பு
கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கியதையடுத்து அமிர்தி வன உயிரியல் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது.
வேலூர்:
கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அமிர்தி சிறு வன உயிரியல் பூங்கா 17 நாள்களுக்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதனடிப்படையில், பண்டிகை நாட்கள், வார விடுமுறை நாட்கள், வெள்ளிக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
மேலும், கொரோனா அச்சம் காரணமாக சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா காலவரையின்றி மூடப்பட்டது. அதேசமயம், வேலூர் மாவட்டம், அமிர்தி வன உயிரியல் பூங்காவில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், அமிர்தி வனஉயிரியல் பூங்காவில் பணியாற்றும் ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து இந்த பூங்காவையும் காலவரையின்றி மூட மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில், கடந்த மாதம் 17-ந் தேதி முதல் அமிர்தி வனஉயிரியல் பூங்கா காலவரையின்றி மூடப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கியதை அடுத்து கடந்த வாரம் முதல் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அமிர்தி வனஉயிரியல் பூங்கா 17 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.