உள்ளூர் செய்திகள்
மரணம்

கடலூர் அருகே திருமணமான 2 ஆண்டுகளில் பெண் திடீர் மரணம்

Published On 2022-02-02 15:51 IST   |   Update On 2022-02-02 15:51:00 IST
திருமணமான 2 ஆண்டுகளில் பெண் திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் அருகே ரெட்டிச்சாவடி சந்திக்குப்பம் சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவரது மனைவி கவுசல்யா (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடம் ஆகியது. இதில் 1 வருடம் 2 மாதம் திரிஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

நேற்று மாலை கவுசல்யா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு மாட்டிக் கொண்டதாக கூறி அவர்களது உறவினர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் கவுசல்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தியதில், ஜனார்த்தனுக்கும் கவுசல்யாவுக்கும் திருமணம் ஆகி 2 வருடம் ஆன நிலையில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதில் கணவன்-மனைவிக்குள் கடந்த சில மாதங்களாக குடும்பத்தகராறு இருந்து வருகின்றது. இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் கவுசல்யா தனது பெற்றோர் வீடான மேல்பட்டாம்பாக்கம் பகுதிக்கு சென்று உள்ளார்.

நேற்று முன்தினம் இவர்களுக்கு 2-வது திருமண நாள் என்பதால் ஜனார்த்தனன் தனது மனைவி கவுசல்யா வீட்டிற்கு நேரில் சென்று சமாதானப்படுத்தி திருமணநாளான்று தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். நேற்று மாலை கவுசல்யா வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

மேலும் திருமணமாகி 2 வருடத்தில் கவுசல்யா இறந்த காரணத்தினால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு போலீசார் பரிந்துரை செய்து உள்ளனர். மேலும் வருவாய் கோட்டாட்சியர் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இறந்த கவுசல்யா உறவினர்கள் கவுசல்யா இறந்ததற்கு உரிய காரணம் தெரியாமல் நாங்கள் கவுசல்யா உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Similar News