உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலை.

வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஐம்பொன் சிலை கடத்தி கொண்டுவரப்பட்டதா?

Published On 2022-02-02 14:51 IST   |   Update On 2022-02-02 14:51:00 IST
திருவலம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஐம்பொன் சிலை கடத்தி கொண்டுவரப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டம் திருவலம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 21) கூலி தொழிலாளி. இவரது வீட்டில் ஐம்பொன் சிலை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

தனிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் நேற்று பிரேம்குமார் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். 

அப்போது பீடத்தின் மீது அமர்ந்தபடி 4 கைகளுடன் அம்மன் சிலையை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

அந்த சிலையின் ஒரு கை ஒரு கால் உடைக்கப்பட்டிருந்தது. சிலையை தனிப்படை போலீசார் கைப்பற்றினர். பிரேம்குமாரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அருகில் உள்ள ஏரியில் மண்ணில் சிலை புதைந்திருந்தது. அதை கொண்டு வந்து வீட்டில் வைத்தேன். சிலையின் உடைந்த கை, கால் ஆகியவற்றை எனது உறவினர் குமார் என்பவர் அவரது சொந்த ஊரான விருத்தாசலத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக பிரேம் குமார் தெரிவித்தார்.

சாமி சிலை மண்ணில் புதைந்திருந்ததற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை. சிலையின் உதட்டில் பூசப்பட்ட சிவப்பு நிற சாயம் அழியாமல் அப்படியே இருந்தது.

அம்மன் சிலை கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் சிலையை வைத்திருந்த பிரேம்குமாரை போலீசார் கைது செய்தனர். சிலையின் கை கால்களை கொண்டு சென்ற அவரது உறவினர் குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். சிலையை விற்பனை செய்வதற்காக உடைந்த பாகங்களை மதிப்பீடு செய்ய கொண்டு சென்றது தெரியவந்துள்ளது.

இந்த சிலை உண்மையிலேயே ஏரியில் இருந்து எடுக்கப்பட்டதா? அல்லது கடத்திவரப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணையில் இறங்கி உள்ளனர். இதுபோன்ற அம்மன் சிலை வேறு எங்காவது கொள்ளை போனதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News