உள்ளூர் செய்திகள்
வேலூரில் அதிக குற்றங்கள் நடைபெறும் இடங்கள் தீவிர கண்காணிப்பு
வேலூரில் அதிக குற்றங்கள் நடைபெறும் இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.
வேலூர்:
வேலூர் சரக டி.ஐ.ஜி. அலுவலக வளாகத்தில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அங்கு அவர்களின் பயன்பாட்டுக்காக நூலகம், உடற்பயிற்சி கூடம் மற்றும் அவர்களின் குழந்தைகள் விளையாட சிறுவர் பூங்கா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
இதனை நேற்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் திறந்துவைத்தார். அப்போது உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் உடனிருந்தார்.
பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் போலீசார் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வேலூர் உட் கோட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆர்பர்ட்ஜான் நடவடிக்கை மேற்கொண்டார்.
அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை வேலூர் உட் கோட்டத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்கள் தொடர்பான பட்டியலை வைத்து எந்தப் பகுதியில் அதிகமாக குற்றங்கள் நடைபெற்றுள்ளது என்பதை வைத்து அந்தப பகுதிகளை புவியியல் தகவலமைப்பு வரைபடம் தயார் செய்தார்.
அந்த வரைபடத்தில் வேலூர் உட் கோட்டத்தில் எந்தப் பகுதியில் அதிகமாக குற்றங்கள் நடைபெற்றது என்ற விவரம் குறிக்கப்பட்டிருக்கும்.
அதை வைத்து அந்தப் பகுதியில் இனி குற்றங்கள் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த உள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.
மேலும் தனியார் பாதுகாவலர்களும் குடியிருப்புவாசிகளின் உதவியுடன் பணியமர்த்த நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
இனி வரும் நாட்களில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க இந்த பகுப்பாய்வு உதவும். இதன்மூலம் குற்ற சம்பவங்களை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.