உள்ளூர் செய்திகள்
திமுக - தேமுதிக

கடலூர் மாநகராட்சி தேர்தல்: தி.மு.க.- தே.மு.தி.க. நிர்வாகிகள் ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை?

Published On 2022-02-01 17:00 IST   |   Update On 2022-02-01 17:00:00 IST
கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் உள்ள தே.மு.தி.க. நிர்வாகிகள் ரகசியமாக தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாகவும், தே.மு.தி.க. நிர்வாகிகள் 2 வார்டுகளில் போட்டியிடுவதற்கு கேட்பதாகவும் கூறப்படுகிறது.
கடலூர்:

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பாஜக, தே.மு.தி.க., பா.ம.க. கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது. இதனைத் தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டது. அதன்படி கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட்டார்.

தற்போது தமிழகம் முழுவதும் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தி.மு.க. கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க., பாஜக என அனைவரும் தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவித்து வருகின்றனர்.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கடலூர் நகராட்சி மாநகராட்சியாக அறிவிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சியாக அறிவித்து தற்போது முதல்முறையாக மேயர், துணை மேயர் பதவிக்கு களம் கண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக கடலூர் மாநகராட்சியில் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள், அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகள் கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் போட்டியிடுவதற்கு தயாராகி உள்ளனர்.

கடலூர் மாநகராட்சியில் அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் தற்போது தீவிரமாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் நேற்றுவரை அவரவர்களுக்கு பலம் வாய்ந்த வார்டுகளை கேட்டு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் தே.மு.தி.க. முக்கிய நிர்வாகிகள் ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது.

இந்த ரகசிய கூட்டணி பேச்சு வார்த்தையில், கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் உள்ள தே.மு.தி.க. நிர்வாகிகள் ரகசியமாக தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாகவும், தே.மு.தி.க. நிர்வாகிகள் 2 வார்டுகளில் போட்டியிடுவதற்கு கேட்பதாகவும் கூறப்படுகிறது.

தி.மு.க.வுடன் ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கூட்டணியில் உள்ள நிலையில் தே.மு.தி.க. இரகசிய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுவிட்டால் அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என முக்கிய கட்சி நிர்வாகிகள் பேசி வருகின்றனர். இதையொட்டி தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது.

Similar News